“சகோதரர். டிம், நீங்கள் அதைப் பார்த்தீர்களா?” எனது நண்பர், கானா நாட்டு போதகர், ஒரு மண் குடிசையில் சாய்ந்திருந்த செதுக்கப்பட்ட ஒரு பொருளின் மீது தமது டார்ச் லைட்டை ஒளிரச் செய்து என்னிடத்தில் அப்படி கேட்டார். அமைதியாக, “அந்த சிலை தான் இவர்களுடைய விக்கிரகம்” என்றார். ஒவ்வொரு செவ்வாய் மாலையும், பாஸ்டர். சாம் இந்த தொலைதூர கிராமத்தில் சத்தியத்தை பகிர்ந்துகொள்ள இந்த புதர்வழியாய் பயணம் செய்வது வழக்கம்.
எசேக்கியேல் புத்தகத்தில், யூதேய ஜனங்கள் எவ்விதம் விக்கிரக ஆராதனையில் சிக்குண்டார்கள் என்று நாம் பார்க்கமுடியும். எருசலேமின் தலைவர்கள் எசேக்கியேல் தீர்க்கதரிசியை பார்க்க வந்தபோது, “இந்த மனுஷர் தங்கள் நரகலான விக்கிரகங்களைத் தங்கள் இருதயத்தின்மேல் நாட்டி(யுள்ளனர்)” (14:3) என்று தேவன் எசேக்கியேலுக்கு வெளிப்படுத்துகிறார். மரத்தினாலும் மண்ணினாலும் செய்யப்பட்ட விக்கிரகங்கள் அவருடைய பிரச்சினை அல்ல. அது அவர்களுடைய இருதயத்தின் பிரச்சினை என்பதை எசேக்கியேல் அவர்களுக்கு வெளிப்படுத்துகிறார். நாம் அனைவரும் அந்த பிரச்சினையினால் பாதிக்கப்படுகிறோம்.
அலிஸ்டர் பெக் என்னும் வேதாகம ஆசிரியர், “தேவனைத் தவிர்த்து நம்முடைய சமாதானத்திற்காகவும், சுய அங்கீகாரத்திற்காகவும், திருப்திக்காகவும் அல்லது நம்முடைய விருப்பத்திற்காகவும் நாம் எதையெல்லாம் தேடுகிறோமோ” அதுவே விக்கிரகம் என்று குறிப்பிடுகிறார். நம்முடைய பார்வைக்கு நல்லதாய் தெரிகிற காரியங்கள் கூட விக்கிரகமாய் மாறலாம். ஜீவனுள்ள தேவனை விட்டுவிட்டு நம்முடைய சுயமதிப்பையும் விருப்பத்தையும் எங்கு தேடினாலும் அது விக்கிரக ஆராதனையே.
“திரும்புங்கள், உங்கள் நரகலான விக்கிரகங்களை விட்டுத் திரும்புங்கள்; உங்கள் சகல அருவருப்புகளையும் விட்டு உங்கள் முகங்களைத் திருப்புங்கள்” (வச. 6) என்று கர்த்தர் சொல்லுகிறார். ஆனால் அதைச் செய்வதற்கு இஸ்ரவேல் தகுதியற்றது என்பதை நிரூபித்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக தேவனிடத்தில் அதற்கான தீர்வு இருந்தது. கிறிஸ்துவின் வருகையையும் பரிசுத்த ஆவியானவருடைய வரங்களையும் சிந்தையில் வைத்து, “உங்களுக்கு நவமான இருதயத்தைக் கொடுத்து, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியைக் கட்டளையி(டுவேன்)” (36:36). என்று வாக்குபண்ணுகிறார். இதை நாம் தனியாய் சாதிப்பது சாத்தியமில்லை.
உங்களுக்கு விரக்தி ஏற்படும்போது யாரிடத்தில் ஆறுதலை தேடுவீர்கள்? அவர்களிடமிருந்து தேவனிடத்தில் உங்கள் சிந்தையை திருப்ப இன்றிலிருந்து என்ன செய்யப்போகிறீர்கள்?
தகப்பனே, என்னுடைய இருதயத்தில் இருக்கும் விக்கிரகங்களை எனக்கு காண்பியும். அதை தகர்த்து, உம்முடைய அன்பில் வாழ எனக்கு உதவிசெய்யும்.