மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஒர் ஊருக்கு பார்வையாளராய் சென்ற என்னுடைய அமெரிக்க போதகர், காலை 10 மணி ஞாயிறு ஆராதனைக்கு வந்துசேருவதாக உறுதியளித்திருந்தார். ஆலயம் வெறுமையாயிருந்தது. அவர் காத்திருந்தார். ஒரு மணி நேரம் கடந்தது. இரண்டு மணி நேரம் கடந்தது. கடைசியாக, 12:30 மணிக்கு திருச்சபையின் போதகர் உள்ளே வர, அவரைத் தொடர்ந்து பாடல் குழுவினரும், திருச்சபை அங்கத்தினர்களும் உள்ளே பொறுமையாக வந்தனர். ஆராதனை துவங்கியது. “காலம் நிறைவேறினபோது ஆவியானவர் நம்மை அழைத்தார், தேவன் தாமதிக்கவில்லை” என்று என்னுடைய போதகர் பின்பாக எங்களிடம் அந்த சம்பவத்தைக் குறித்து சொன்னார். அந்த இடத்தின் கலாச்சாரம் வித்தியாசமானது என்பதை என்னுடைய போதகர் புரிந்துகொண்டார்.
காலம் என்பது கலாச்சாரத்திற்கு கலாச்சாரம் வித்தியாசப்படலாம், ஆனால் தேவனுடைய குறித்த நேரம் என்பது வேதத்தில் பரவலாய் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. லாசரு வியாதிப்பட்டு மரித்தபின்பு, இயேசு நான்கு நாட்கள் கழித்து வருகிறார். லாசருவின் சகோதரியைப் பார்த்து ஏன் என்று விசாரிக்கிறார். மார்த்தாள் இயேசுவிடம் “ஆண்டவரே, நீர் இங்கேயிருந்தீரானால் என் சகோதரன் மரிக்கமாட்டான்” (யோவான் 11:21) என்று கூறுகிறாள். ஏன் தேவன் நம்முடைய அவசரத்திற்கு செயல்பட்டு காரியங்களை சரிசெய்வதில்லை என்று நாமும் அப்படி யோசிக்கலாம். அவருடைய பதிலுக்காகவும் வல்லமையான கிரியைக்காகவும் காத்திருப்பதே நல்லது.
இறையியல் நிபுணரான ஹொவர்ட் துர்மேன், “பிதாவே, நாங்கள் காத்திருக்கிறோம், உம்முடைய பெலன் எங்களுடைய பெலனாகும் வரை, உம்முடைய இருதயம் எங்களுடைய இருதயமாகும் வரை, உம்முடைய மன்னிப்பு எங்களுடைய மன்னிப்பாகும் வரை, நாங்கள் காத்திருக்கிறோம் தேவனே, நாங்கள் காத்திருக்கிறோம்” என்று எழுதுகிறார். கடைசியில் லாசருவுக்கு தேவன் அற்புதத்தினால் பதிலளித்ததுபோல, நாமும் பதிலைப்பெறும்போது, தாமதத்தின் அர்த்தத்தை சரியாய் விளங்கிக்கொள்ளக் கூடும்.
தேவன் உங்களுக்கு என்ன செய்யவேண்டும் அல்லது என்ன கொடுக்கவேண்டும் என்று நீங்கள் காத்திருக்கிறீர்கள்? நீங்கள் எவ்வாறு விசுவாசத்தில் காத்திருக்க முடியும்?
பிதாவே நான் உமக்காக காத்திருக்கிறேன். இந்த காத்திருக்கும் தருணத்தில், உம்முடைய பெலத்தையும் உறுதியான நம்பிக்கையையும் எனக்கு தாரும்.