தன்னுடைய மகன் மனந்திரும்பி தேவனிடம் வரும்படிக்கு மோனிகா பாரத்தோடு ஜெபித்தாள். அவள் அவனுடைய தவறான நடக்கைகளைக் கண்டு மனமுடைந்துபோனாள். அவன் வாழ்ந்த பல்வேறு இடங்களில் அவனைத் தொடர்ந்து கண்காணித்துக்கொண்டேயிருந்தாள். சூழ்நிலை கைமீறியதாய் தெரிந்தது. திடீரென்று ஒரு நாளில் அது சம்பவித்தது. அவளுடைய மகன் தேவனை சந்திக்க நேரிட்டது. அவன் கிறிஸ்தவ திருச்சபையின் ஒரு பெரிய இறையியல் நிபுணராய் மாறினான். அவர் வேறு யாருமில்லை, நம் அறிவுக்கு உட்பட்ட, ஹிப்போவின் பிஷப்பாகிய அகஸ்டின்.
“கர்த்தாவே… எதுவரைக்கும்?” (ஆபகூக் 1:2). அதிகாரத்திலிருக்கும் தலைவர்கள் அநீதி செய்யும்போது தேவன் மௌனமாயிருக்கிறதைக் கண்டு ஆபகூக் தீர்க்கதரிசி புலம்புகிறார் (வச. 4). நமக்கு இழைக்கப்பட்ட அநீதியினால் நாம் தேவனை தேடி ஓடிய நாட்களை நினைத்துப்பாருங்கள். வியாதி, பணப்பிரச்சினை அல்லது பிள்ளைகள் தேவனை விட்டு வழிதப்பிப் போகிற சூழ்நிலைகள் என்று அநேகம் இருக்கின்றன.
ஒவ்வொருமுறை ஆபகூக் புலம்பும்போதும், தேவன் அவருடைய கதறலைக் கேட்டார். நாம் விசுவாசத்தில் காத்திருக்கும்போது, தீர்க்கதரிசியைப்போலவே நம்முடைய புலம்பலை துதியாய் மாற்றப் பழகலாம். அவர் சொல்லும்போது, “நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன், என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன்” (3:18) என்று தேவனை துதிக்கிறார். அவரால் தேவனுடைய வழிகளை புரிந்துகொள்ள முடியவில்லை என்றாலும், ஆபகூக் தேவனை நம்பினார். புலம்பலும் துதியும் நம்பிக்கையை பிரதிபலிக்கும் விசுவாசத்தின் கிரியைகளே. நாம் தேவனுடைய குணாதிசயங்களை அடிப்படையாய் வைத்து அவரிடத்தில் புலம்புகிறோம். அவர் யார் என்பதை அடிப்படையாய் வைத்து சர்வ வல்லமையுள்ள தேவனை நாம் துதிக்கிறோம். ஒரு நாள், அவருடைய கிருபையினால் புலம்பல்கள் எல்லாம் துதியாய் மாறும்.
இன்று நீங்கள் எதைக் குறித்து புலம்பிக்கொண்டிருக்கிறீர்கள்? அவற்றை எவ்வாறு துதியாய் மாற்றுவீர்கள்?
அன்பான இயேசுவே, நீர் யார் என்பதையும் என்னுடைய வாழ்க்கையில் நீர் செய்த நன்மைகளையும் எனக்கு நினைவுபடுத்தும்.