நான் எதிர்பாராதவிதமாக ஒரு குட்டித்தூக்கம் போட்டேன். அறைகள் அதிர்வது போல, கீழறையில் என் மகன் கிட்டாரைச் சத்தமாக வாசித்தான். அமைதியில்லை, சமாதானமில்லை, தூக்கம் போனது. சிலநிமிடங்களில் எனது மகள் “வியத்தகு கிருபை” என்ற பாடலை தனது பியானோவில் வாசிக்க, இனிமையான இசை என் காதுகளை வருடியது.
பொதுவாக எனது மகன் கிட்டாரை வாசிக்கையில், எனக்குப் பிடிக்கும். ஆனால் அந்த நொடியில், எனக்கு எரிச்சலூட்டி அமைதியைக் குலைத்தது. இருப்பினும் உடனே ஜான் நியூட்டனின் பாடல் வரிகள், அமளியின் மத்தியில் மேற்கொள்ளும் கிருபையை எனக்கு ஞாபகப்படுத்தியது. நமது வாழ்வின் புயல்கள் எவ்வளவாய் இரைந்தாலும், தேவையற்றதாக நம்மைத் திசைதிருப்பினாலும்; கிருபையைக் குறித்த தேவனின் குறிப்புகள் உண்மையாயும் தெளிவாயும் உள்ளன. எப்போதும் நம்மீதிருக்கும் அவருடைய கவனமான கரிசனையை நினைப்பூட்டுகின்றன.
இந்த உண்மையை நாம் வேதத்தில் பார்க்கிறோம். சங்கீதம் 107:23–32 இல், கப்பலோட்டிகள் தங்களை எளிதாய் அழிக்கக்கூடிய பெரும்புயலை எதிர்த்து கடுமையாய் போராடுகின்றனர். “அவர்கள் ஆத்துமா கிலேசத்தினால் கரைந்துபோகிறது.” (வ.26). ஆயினும் நம்பிக்கையிழக்காமல், “கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிறார்கள், அவர்கள் இக்கட்டுகளுக்கு அவர்களை நீங்கலாக்கி விடுவிக்கிறார்.” (வ. 28). இறுதியாக, “அமைதலுண்டானதினிமித்தம அவர்கள் சந்தோஷப்படுகிறார்கள்; தாங்கள் நாடின துறைமுகத்தில் அவர்களைக் கொண்டுவந்து சேர்க்கிறார்.” (வ. 30) என்று வாசிக்கிறோம்.
அமளியின் நேரங்களில், இரைச்சலும் பயமும் அணைகளைத்தாண்டி, நமது ஆத்துமாக்களில் புயலுண்டாக்கலாம். ஆனால், நாம் தேவனை நம்பி அவரிடம் ஜெபிக்கையில் தேவைகளைச் சந்திக்கும் அவரது கிருபையின் பிரசன்னத்தை நாம் அனுபவிப்போம். அவரது நிலையான அன்பென்னும் புகலிடம் அடைவோம்.
மற்றவர்கள் மூலமாகத் தேவனின் புகலிடமான சமாதானத்தை அனுபவித்துள்ளீர்களா? அதைப்போன்ற ஊக்கத்தை நீங்களும் யாருக்கு அளிக்கக்கூடும்?
பிதாவே, வாழ்வின் அலைகள் கொந்தளிக்கையில் உம்மை நோக்கிக் கூப்பிட எனக்கு நினைப்பூட்டும். பிறருக்கும் நம்பிக்கையூட்ட எனக்கு உதவும்.