தனது சிறிய மிதிவண்டியை, தனது சிறிய கால்களால் எவ்வளவு இயலுமோ அவ்வளவு வேகமாய் மிதித்து, ஓட்டிக்கொண்டிருந்த தன்னுடைய மகளை அந்த இளம் தாய் பின்தொடர்ந்தாள். ஆனால் அவள் நினைத்த வேகத்தை விட அதிக வேகமெடுக்கவே, கட்டுப்பாடின்றி மிதிவண்டியிலிருந்து கீழே விழுந்த சிறுமி, தனது கணுக்காலில் காயம் பட்டதென்று அழுதாள். அவள் தாயோ அமைதியாய் அவளருகே மண்டியிட்டு, தாழக் குனிந்து, கணுக்காலில் முத்தமிட்டாள் (வலி சரியாகிவிடுமாம்!). ஆச்சரியம்! அந்த சிறுமி குதித்தெழுந்து, மிதிவண்டியில் ஏறி மீண்டும் ஓட்ட ஆரம்பித்தாள். நமது வலிகளும்கூட இப்படி இலகுவாய் மாறினால் எவ்வளவு நலமாயிருக்கும்!
அப்போஸ்தலன் பவுல் தனது தொடர்ச்சியான உபத்திரவங்களின் மத்தியில் தேவனுடைய ஆறுதலை அனுபவித்ததால், அவரால் தொடர்ந்து முன்னேற முடிந்தது. 2 கொரிந்தியர் 11:23–29 இல், அவர் சந்தித்த உபத்திரவங்களில் சிலவற்றைப் பட்டியலிடுகிறார்: அடிகள், கசையடிகள், கல்லெறியப்படுதல், தூக்கமின்மை, பட்டினி, சபைகளைக் குறித்த கவலை. அவர் தேவன், “இரக்கங்களின் பிதாவும், சகலவிதமான ஆறுதலின் தேவனுமாயிருக்கிறார்” (1:3) என்பதை மிகநெருக்கமாக அறிந்துகொண்டார். இதையே மற்றுமொரு மொழிபெயர்ப்பு, “தேவன், மென்மையான அன்பைத் தரும் தகப்பன்’ என்கிறது. அந்த தாய் தன் குழந்தையை தேற்றியதுபோல; தேவனும் நமது வேதனையின் மத்தியில் தாமே கீழே குனிந்து மென்மையாய் நம்மைப் பராமரிக்கிறார்.
தேவன் அன்பாய் தேற்றுகிற வழிமுறைகள் பலவாயும், வித்தியாசமானதுமாய் உள்ளன. நாம் தொடர்ந்து முன்னேற தமது வசனத்தின்மூலம் நம்மை ஊக்குவிப்பார் . நண்பர்கள் மூலமோ, யாராகிலும் மூலமோ நம்மோடு விசேஷித்தவிதமாக பேசி, நமது ஆவிக்கு ஆறுதலளிப்பார். நமது உபத்திரவங்கள் ஓயாததுதான், ஆனால் தேவன் கீழே குனிந்து நமக்கு உதவுவதால், நாம் மீண்டும் எழுந்து, ஓட துவங்கலாம்.
தேவன் உங்களை எவ்வாறு ஆறுதல் படுத்தினார்? அதனால் நீங்கள் மற்றவர்களுக்கு ஒரு ஆறுதலாகவே எவ்வாறு மாறமுடியும்?
இரக்கங்களின் பிதாவே, என்னருகே வந்து, நான் இளைப்பாறுதலையும் ஊக்கத்தையும் பெறுகிற உமது கரங்களால் என்னைத் தாங்கிக்கொள்ளும்.