கிளார்க் மரங்கொத்தி ஒரு வியப்பான பறவையினம். ஒவ்வொரு ஆண்டும் தன்னை குளிர்காலத்திற்கு ஆயத்தப்படுத்தும் விதமாக நான்கைந்து வெள்ளை பட்டை பைன் விதைகளைச் சேகரிக்கும் இப்பறவை, ஒரு மணிநேரத்தில் சுமார் ஐந்நூறு விதைகளை ஒளித்துவைக்கிறது. பிறகு சிலமாதங்கள் கழித்து, கடும்பனியின் மத்தியிலும் இவ்விதைகளைத் தேடி வருகிறது. ஒரு கிளார்க் மரங்கொத்திப் பறவை, விதைகளை ஒளித்து வைத்திருக்கும் சுமார் பத்தாயிரம் இடங்களைக் கூட அறிந்திருக்கும். இது மிகவும் ஆச்சரியமானது (மனிதர்களாகிய நாம் நமது மூக்குக் கண்ணாடிகளையும், வண்டி சாவிகளையும் வைத்த இடம் தெரியாமல் திணறுவதை நினைத்தால் இது எவ்வளவு விசேஷித்தது).
இந்த வியத்தகு ஞாபக சக்தியும்கூட நமது ஜெபங்களை ஞாபகத்தில் வைத்திருக்கும் தேவனோடு ஒப்பிடுகையில், ஒன்றுமேயில்லை. ஒவ்வொரு உண்மையான ஜெபத்தையும் அவர் நினைவில் வைத்து, வருடங்கள் உருண்டோடினாலும் தவறாது அவைகளுக்குப் பதிலளிக்க வல்லவர். வெளிப்படுத்தின விசேஷத்தில் அப்போஸ்தலன் யோவான், பரலோகத்தில் தேவனை நான்கு ஜீவன்களும் இருபத்துநான்கு மூப்பர்களும் தொழுதுகொள்வதை விவரிக்கிறார். அவர்கள் ஒவ்வொருவரும், “பரிசுத்தவான்களுடைய ஜெபங்களாகிய தூபவர்க்கத்தால் நிறைந்த பொற்கலசங்களையும்” (5:8) பிடித்துக்கொண்டிருந்தார்கள்.
பண்டைய காலத்தில் தூபவர்க்கங்கள் விலையேறப்பெற்றவை. அவ்வாறே தேவனுக்கு நமது ஜெபங்களும் விலையேறப்பெற்றவை. ஆகவேதான் தேவன் அவைகளை தமக்குமுன் நித்தமும் பொற்கலசங்களில் வைத்துப் பாதுகாக்கிறார். தேவனுக்கு நமது ஜெபங்கள் முக்கியம், ஏனெனில் நாம் அவருக்கு முக்கியம். மேலும் நம்மைப்போலத் தகுதியற்றவர்களுக்குத் தேவன் இயேசுவின் மூலமாகப் பாராட்டும் இரக்கத்தால், அவரோடு தடையில்லா ஐக்கியத்தை அளிக்கிறார் (எபிரேயர் 4:14–16). ஆகவே தைரியமாக ஜெபியுங்கள், தேவனின் வியத்தகு அன்பின் காரணத்தால் உங்கள் ஒரு வார்த்தையும்கூட மறக்கப்படுவதுமில்லை, தவறவிடப்படுவதுமில்லை.
தேவன் உங்கள் ஜெபத்தை மறப்பதில்லை என்பது உங்களை எவ்வாறு ஊக்குவிக்கிறது? இன்றைக்கு நீங்கள் ஜெபிக்க உங்களுக்கு யார் தேவை?
பரலோக தகப்பனே, உண்மையாய் ஜெபிக்க எனக்குத் தேவையான நீடியபொறுமையைத் தாரும். மேலும் உம்மால் மட்டுமே செய்யக்கூடியவற்றை எதிர்பார்க்கும் விசுவாசத்தைத் தாரும்.