சில ஆண்டுகளுக்கு முன் ஒருவர் சில அடிதூரம் எனக்கு முன் நடந்துகொண்டிருந்தார். அவருடைய கைநிறைய பொட்டலங்கள் இருந்தன. திடீரென, நிலைதடுமாறி அவர் விழுந்தார், பைகள் சிதறின. சிலர் அவரை தூக்கிவிட்டனர், சிதறியவற்றையும் சேகரித்து உதவினர். ஆனால் அவர்கள் அவருடைய பணப்பையைக் கவனிக்கவில்லை. நான் அதைக் கண்டு, அந்த முக்கியமான பொருளை எடுத்துக்கொண்டு, அதை அவரிடம் ஒப்படைக்கத் தீவிரமாகப் பின்தொடர்ந்தேன். “சார்,சார்” என்று நான் கத்த, இறுதியில் திரும்பினார். என்னிடம் திரும்பிய அவரிடம் நான் பணப்பையை ஒப்படைக்கையில், அவர் முகத்திலிருந்த ஆச்சரியம் கலந்த நன்றியுணர்வை என்னால் மறக்க முடியவில்லை.
அந்த மனிதரை நான் பின்தொடர்ந்தது எனக்கு ஒரு புதிய அனுபவத்தைத் தந்தது. பிரபலமான சங்கீதம் 23 ல் “என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்” (வ.6) என்பதில் வரும் “தொடரும்” என்கிற மொழியாக்கம் பொருத்தமானதுதான். என்றாலும், அதின் எபிரெய பதம் வலுவான, தீவிரமான அர்த்தத்தைக் கொண்டுள்ளது. இதன் எழுத்தியல்பான அர்த்தம் “துரத்துதல் அல்லது விரட்டுதல்”, கிட்டத்தட்ட ஒரு வேட்டை விலங்கு தன் இரையைத் துரத்துவதைப்போல (ஒரு ஓநாய், ஆட்டைத் துரத்துவதாக) நினைத்துக்கொள்ளுங்கள்.
தேவனின் நன்மையும், கிருபையும் உங்களை ஏதோ கடமைக்காகப் பின்தொடர்வதைப் போலவோ, உங்கள் செல்லப்பிராணி சாவகாசமாக உங்கள் பின்னே வருவது போலவோ தவறாய் எண்ணிக்கொள்ளாதிருங்கள். நிச்சயம் இல்லை. ஒரு நோக்கத்தோடு நாம் தீவிரமாய் பின்தொடரப்படுகிறோம். பணப்பையைத் தொலைத்த அந்த மனிதன் விரட்டப்பட்டதுபோல, அழியாத மாறாத அன்பைக்கொண்டு நம்மை நேசிக்கும் நல்ல மேய்ப்பர் நம்மைத் தேடி வருகிறார்(வ.1, 6).
தேவனின் நன்மை உங்களைத் தேடி வருவதை மெய்யாகவே நீங்கள் நம்புகிறீர்களா? வேதத்தில் "தொடரும்" என்கிற வார்த்தை உள்ளதே, பின்னர் ஏன் அதை நம்பக்கூடாது?
நல்ல மேய்ப்பரே, உமது நன்மையும் கிருபையும் என்னைத் தீவிரமாய் பின்தொடருவதற்காக உமக்கு நன்றி.