கிறிஸ்துமஸிற்கு முந்தின ஒரு பரபரப்பான நாளில், மூதாட்டி ஒருவர் என் வீட்டினருகே உள்ள தபால் நிலையத்திற்கு வந்தார். அவருடைய மெதுவான அசைவைப் பொறுமையாகக் கவனித்த தபால் நிலையத்தின் எழுத்தர், “வருக இளம் பெண்ணே” என்றார். அவர் வார்த்தைகளிலிருந்த கனிவைக் கவனித்த அனைவருக்கும் “இளம் பெண்ணே” என்று அவர் அழைத்தது பிடித்திருந்தது.
வயது முதிர்ந்தவர்கள் நமது நம்பிக்கையை ஊக்குவிப்பதை வேதத்தில் காணலாம். பிள்ளையாகிய இயேசுவைக் கர்த்தருக்கென்று ஒப்புக்கொடுக்க மரியாளும் யோசேப்பும் ஆலயத்திற்கு வந்தனர் (லூக்கா 2:23; யாத்திராகமம் 13:2, 12), அங்கே திடீரென இரண்டு முதியவர்கள் மையப்படுத்தப்படுகிறார்கள்.
முதலாவது சிமியோன், இவர் மேசியாவை காணப் பல ஆண்டுகள் காத்திருந்தார். இவர் இயேசுவைக் கையில் ஏந்தி, ” ஆண்டவரே, உமது வார்த்தையின்படி உமது அடியேனை இப்பொழுது சமாதானத்தோடே போகவிடுகிறீர்; தேவரீர் சகல ஜனங்களுக்கும் முன்பாக ஆயத்தம்பண்ணின உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது” (லூக்கா 2:29–32). என்றார்.
பிறகு சிமியோன், மரியாளிடமும் யோசேப்பிடமும் பேசிக்கொண்டிருக்கையில் அன்னாள் என்னும் மிகவும் வயதான தீர்க்கதரிசி (வ.36) அங்கே வருகிறாள். திருமணமாகி ஏழே ஆண்டுகளில் விதவையான இவள், தனது எண்பத்து நான்காம் வயதுவரை தேவாலயத்தில் வாழ்ந்தவள். தேவாலயத்தை விட்டு நீங்காமல், இரவும் பகலும் உபவாசித்து, ஜெபம்பண்ணி, ஆராதனை செய்துகொண்டிருந்தவள். இவள் இயேசுவைக் கண்டவுடன், தேவனைப் புகழ்ந்து, எருசலேமிலே மீட்புண்டாக காத்திருந்த யாவருக்கும் அந்தப் பிள்ளையைக் குறித்துப் பேசினாள். (வ.37–38).
நமக்கு எவ்வளவு வயதானாலும், பெரும் எதிர்பார்ப்புகளோடு தேவனுக்காகக் காத்திருப்பதை நிறுத்த வேண்டாமென்று நம்பிக்கையான இவ்விரு ஊழியக்காரர்களும் நமக்கு நினைப்பூட்டுகின்றனர்.
தேவன் உண்மையுள்ளவர் என்பதை உங்களுக்குக் கற்றுக்கொடுக்க மூத்த விசுவாசிகள் சொன்ன பாடங்கள் என்ன? அவர்களுடைய திடநம்பிக்கை உங்களை எவ்வாறு உத்வேகப்படுத்துகிறது?
உண்மையுள்ள அன்பு தகப்பனே, நாங்கள் நம்பிக்கையிழக்கையில், உமக்காக எதிர்பார்ப்போடு காத்திருக்க எங்களுக்கு நினைப்பூட்டும்.