எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும். மத்தேயு 6:11
ஒரு காலைப்பொழுதில் எனது குழந்தைகள் காலமே எழுந்து, காலை உணவை தாங்களே சமைப்பதென்று தீர்மானித்தனர். கடுமையான வேலைப்பளு நிறைந்த அந்த வாரத்தின் சோர்வால் நானும் எனது மனைவியும், அந்த சனிக்கிழமையன்று காலை 7:௦௦ மணி மட்டுமாவது தூங்க முயன்றோம். திடீரென நொறுங்கும் சத்தம் பேரோசையோடு என்னை எழுப்ப படுக்கையிலிருந்து பாய்ந்து, கீழ் படிகளில் விரைந்தேன். அங்கே உடைந்த தட்டும், தரையெங்கும் சிந்திய உணவும், அதைப் பெருக்கி சுத்தம்செய்யப் போராடிக்கொண்டிருந்த என் ஐந்து வயது மகன் ரோஷனையும் கண்டேன். என் பிள்ளைகள் பசியோடிருந்தனர், ஆனால் எங்களிடம் உதவி கேட்கவில்லை. எங்களைச் சார்ந்திருப்பதை விடுத்து சுயமாகச் செயல்பட எண்ணினர், அதின் பலனாக உணவு வீணானது.
மனுஷர் வழக்கத்தில் பிள்ளைகள் நம்மைச் சார்ந்திருப்பதை விடுத்து, தாங்களாக சுயமாய் செயல்படவே எதிர்பார்க்கப்படுகின்றனர். ஆனால் தேவனுடனான உறவிலோ, சுயமாய் செயல்படுவதை விடுத்து அவரை சார்ந்துகொள்வதே வளர்ச்சியாகும். ஜெபத்தில்தான் நாம் அவ்வாறு சார்ந்துகொள்ளப் பழகுகிறோம். “‘எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்.” (மத்தேயு 6:11) என்று ஜெபிக்க இயேசு தமது சீடர்களுக்கும், அவரை விசுவாசிக்கும் நமக்கும் கற்றுக்கொடுக்கையில் சார்ந்துகொள்ளும் ஒரு ஜெபத்தையே கற்றுக்கொடுத்தார். ஆகாரம் என்பது வாழ்வாதாரம், விடுதலை மற்றும் வழிகாட்டுதலுக்கு உருவகமாக உள்ளது (வ.11–13). இவை அனைத்திற்கும் இதைப் பார்க்கிலும் அதிகமானவற்றிற்கும் நாம் தேவனையே சார்ந்துள்ளோம்.
தாமே உருவான இயேசுவின் விசுவாசிகள் என எவருமில்லை, மேலும் நாம் அவருடைய கிருபையை மிஞ்சினவர்களும் இல்லை. நம் வாழ்நாள் முழுவதும், நம் நாளை துவக்குகையில், “பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே” (வ.9) என்று ஜெபித்து நமது சார்புத்தன்மையை வெளிப்படுத்துவோம்.
இன்று நீங்கள் எந்த "ஆகாரத்திற்காக" ஜெபிக்கிறீர்கள்? தேவனை நோக்கிக் கூப்பிடுகையில், அவர்மீதான உங்கள் நம்பிக்கையை எவ்வாறு வெளிக்காட்டுவீர்கள்?
அன்பு இயேசுவே, நீரே என் சிருஷ்டிகரும் என் ஆதாரமுமாய் இருக்கிறீர். உம்மை நம்ப எனக்கு உதவும்.