என் அம்மாவால் தூரத்திலிருந்தே பிரச்சினை என்ன என்பதை கண்டுபிடித்துவிடமுடியும் என்று தெரிகிறது. ஒரு முறை பள்ளியில் சில பிரச்சினைகளுக்கு பிறகு, என்னை யாரும் கவனிக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் என் விரக்தியான முகத்தை மறைக்க முயன்றேன். “என்ன விஷயம்?” என்று என் அம்மா கேட்டார். அவர் மேலும், “அது ஒன்றுமில்லை” என்று சொல்வதற்கு முன், “நான் உன்னுடைய அம்மா என்பதை நினைவில் வைத்துக்கொள். நான் உன்னைப் பெற்றெடுத்தேன், நீ உன்னை அறிவதை விட உன்னை நான் நன்றாக அறிவேன்” என்று சொன்னார். நான் எப்படிப்பட்டவன் என்பதைக் குறித்த என்னுடைய அம்மாவின் அந்த தெளிவான அறிவு, என்னுடைய துக்கமான நேரங்களில் அவர்களின் ஆதரவு எனக்கு தேவை என்பதை நினைப்பூட்டுகிறது.
கிறிஸ்தவர்களாகிய நாம், நம்மை நன்றாய் அறிந்த ஒரு தேவனால் பராமரிக்கப்படுகிறோம். சங்கீதக்காரன் தாவீது, தேவன் அவருடைய பிள்ளைகளின் வாழ்வில் கொண்டிருக்கும் அக்கறைக்காக தேவனைத் துதிக்கிறார், “கர்த்தாவே, நீர் என்னை ஆராய்ந்து, அறிந்திருக்கிறீர். என் உட்காருதலையும் என் எழுந்திருக்குதலையும் நீர் அறிந்திருக்கிறீர்; என் நினைவுகளைத் தூரத்திலிருந்து அறிகிறீர்” (சங்கீதம் 139:1-2). நாம் யார் என்பதையும், நம்முடைய எண்ணம், ஆசை மற்றும் செயல் ஆகியவற்றையும் தேவன் அறிந்திருப்பதால், அவருடைய அபரிமிதமான அன்பு மற்றும் பாதுகாப்பின் எல்லையைத் தாண்டி நாம் எங்கும் செல்ல முடியாது (வச. 7-12). மேலும், “நான்… சமுத்திரத்தின் கடையாந்தரங்களிலே போய்த் தங்கினாலும், அங்கேயும் உமது கை என்னை நடத்தும்” (வச. 9-10) என்று தாவீது பாடுகிறார். வாழ்க்கையில் நாம் எங்கிருந்தாலும், ஜெபத்தில் தேவனை கூப்பிடும்போது, அவர் நமக்குத் தேவையான அன்பையும், ஞானத்தையும், வழிகாட்டுதலையும் தருவார் என்று உறுதியாய் நம்பலாம்.
எப்பொழுது, மற்றவர்கள் உங்களை புரிந்து கொள்ளவில்லை என நீங்கள் உணர்ந்திருக்கிறீர்கள்? அச்சமயங்களில் தேவனுடைய பிரசன்னம் உங்களுக்கு எப்படி உதவியிருக்கிறது?
அன்பான தேவனே, பல நேரங்களில் மற்றவர்களால் நான் புரிந்து கொள்ளப்படாமல் தனிமையாய் உணருகிறேன். ஆனால் யாரும் என்னை பொருட்படுத்தவில்லை என்றாலும், நீர் என்னை பார்க்கிறீர், கேட்கிறீர், என்னை நேசிக்கிறீர் என்பதை அறிந்திருக்கிறேன்.