“உங்களுக்காக நான் நிச்சயமாய் ஜெபித்துக்கொள்கிறேன்.” இந்த வார்த்தைகளை நீங்கள் கேட்டிருப்பீர்களானால், அதைச் சொல்லும் நபர் உண்மையில் அதைச் சொல்கிறாரா என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். ஆனால் எட்னா டேவிஸ் அதைச் சொல்லும்போது நீங்கள் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. ஒரு சிறிய நகரத்தில் உள்ள அனைவரும் எட்னாவின் மஞ்சள் நோட்டு புத்தகத்தை பக்கம் பக்கமாக அறிவர். அதில் எழுதப்பட்டிருக்கும் ஜெபக்குறிப்புகளை ஒவ்வொரு நாள் காலையிலும் சத்தமாக ஜெபிப்பது அவரின் வழக்கம். அவருடைய ஜெபப்பட்டியலில் இடம்பெற்றிருக்கும் அனைவருக்கும் ஜெபத்திற்கான பதில் கிடைக்காமல் இருக்கலாம். ஆனால் எட்னாவின் மரணத்தில், சாட்சியிட்ட மக்கள் அனைவரும் தங்களுடைய வாழ்க்கையில் தெய்வாதீனமான ஏதோ ஒன்று அவருடைய ஜெபத்தின் மூலமாகவே நடந்தது என்று சாட்சியளித்தனர். 

பேதுருவின் சிறைச்சாலை அனுபவத்தில், ஜெபத்தின் வல்லமையை தேவன் வெளிப்படுத்தினார். ஏரோது ராஜாவின் மனிதர்களால் பிடிக்கப்பட்டு, சிறையில் தள்ளப்பட்ட பிறகு, “வகுப்புக்கு நான்கு போர்ச்சேவகராக ஏற்படுத்திய நான்கு வகுப்புகளின் வசமாக ஒப்புவித்தான்” (அப்போஸ்தலர் 12:4). அவன் தப்பிக்கும் வாய்ப்பிற்கு இடமேயில்லை. ஆனால் “சபையார் அவனுக்காகத் தேவனை நோக்கி ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார்கள்” (வச. 5). அவர்கள் பேதுருவை தங்கள் சிந்தையில் வைத்து ஜெபித்தனர். தேவன் ஆச்சரியமான ஒன்றை செய்தார். சிறைச்சாலையில் இருந்த பேதுருவுக்கு ஒரு தேவதூதன் வெளிப்பட்டு, அவனுடைய சங்கிலிகளிலிருந்து அவனை விடுவித்து, சிறைக்கு வெளியே பாதுகாப்பாக அவனை அழைத்துச் சென்றார் (வச. 7-10).

சிலர் தங்களுடைய “சிந்தனைகளையும் ஜெபங்களையும்” வீணாய் பயன்படுத்தலாம். ஆனால் நம்முடைய பரமபிதா நம்முடைய சிந்தையை அறிந்திருக்கிறார். நம்முடைய ஜெபங்களைக் கேட்கிறார., அவருடைய பரிபூரண சித்தத்தின்படி நமக்காகச் செயல்படுகிறார். சர்வ வல்லமையுள்ள ஆண்டவருக்கு நாம் ஊழியம் செய்யும்போது, நாம் மற்றவர்களுக்காக ஜெபிப்பதும், மற்றவர்கள் நமக்காக ஜெபிப்பதும் சிறிய காரியமல்ல.