Archives: செப்டம்பர் 2022

அன்பில் வேரூன்றியது

நான் அந்தப் புற்றுநோய் சிகிச்சை மையத்தை அடைந்தபோது தனிமையையும், பயத்தையும் அதிகம் உணர்ந்தேன். ஏனெனில், அங்கே எனது தாயாரை தனியொருவளாகப் பராமரிக்க வேண்டியிருந்தது. எனது குடும்பத்தையும், பரிச்சயமான சூழலையும் விட்டு சுமார் 1200 கி.மீ தூரம் கடந்து வந்துள்ளேன். ஆனால் நான் எனது சாமான்களை அவ்விடத்தில் இறக்குமுன்பே, மணி என்ற அந்த மனிதர் ஒரு பெரிய புன்னகையுடன் எனக்கு உதவ முன்வந்தார். நாங்கள் ஆறாவது தளத்திற்கு வந்தடைந்த போது, அவருடைய சிகிச்சைக்கு உறுதுணையாயிருந்த, அவரது மனைவி பாக்கியாவைப் பார்க்க வேண்டும் என முடிவு செய்தேன். நாங்கள் தேவனுக்குள் ஒருவரோடொருவர் சார்ந்திருந்ததால், இந்தத் தம்பதியினர் எனக்கு ஒரு குடும்பமாகவே சீக்கிரம் மாறிவிட்டனர். நாங்கள் ஒன்றாகவே சிரித்தோம், பகிர்ந்தோம், அழுதோம், ஜெபித்தோம். நாங்கள் அனைவரும் வெவ்வேறு இடத்திலிருந்து வந்திருந்தாலும், தேவனுக்குள் ஒருவரோடொருவர் இணைக்கப்பட்டிருந்ததால், அன்பில் வேரூன்றப்பட்டு ஒருவரையொருவர் தாங்கிக்கொள்ள முடிந்தது.

தனது மாமியாகிய நகோமியை பராமரிக்க ரூத் தீர்மானித்ததால், தனக்குப் பாதுகாப்பாயிருந்த பரிச்சயமான சூழலை விட்டு வெளியேறினாள். "அவள் போய், வயல்வெளியில் அறுக்கிறவர்கள் பிறகே பொறுக்கினாள்;" (ரூத் 2:3). அந்த வயலின் எஜமானான போவாஸிடம் அவன் வேலைக்காரன் வந்து, "காலமே துவக்கி இதுவரைக்கும் இங்கே இருக்கிறாள்; இப்பொழுது அவள் குடிசைக்கு வந்து கொஞ்சநேரந்தான் ஆயிற்று என்றான்” (வ.7). நகோமிக்காகத் தான் அக்கறைப்பட்டது போலவே, தனக்காக அக்கறைகொள்ளும் மனிதர்கள் உள்ள பாதுகாப்பான இடத்தை ரூத் கண்டுகொண்டாள் (வ. 8–9). போவாஸின் பெருந்தன்மையைக் கொண்டு ரூத்தையும், நகோமியையும் தேவன் போஷித்தார் (வ.14–16).

வாழ்வின் சூழல்கள் நம்மை நமது சௌகரியமான சூழலைத் தாண்டிக் கொண்டு செல்லும். நாம் தேவனுக்குள் ஒருவரோடொருவர் இணைந்திருந்தால், நம்மை அன்பில் வேரூன்றச்செய்து, ஒருவருக்கொருவர் ஆதரவாய் இருக்கும்படி செய்வார்.

பூர்வ நிலை

சமீபத்தில் எனது கணினி பழுதடைந்ததால், அதை நானே சரிசெய்ய முயன்றேன். சில காணொளிகளின்மூலம் அதைக் கற்றுக்கொள்ள முயன்றேன். ஆனால் அவை பலனளிக்காமல் போகவே, என்னுடைய சில நண்பர்களை உதவிக்கு அணுகினேன். அம்முயற்சிகளும் வீணாய்ப்போனபின், இறுதியாக வேறுவழியின்றி அருகிலிருந்த ஒரு சேவை மையத்தை அணுகினேன். நன்றி கூறும் வண்ணமாக, எனது கணினிக்குச் சேவை உத்தரவாதம் இருந்தது.

பழுதை ஆய்வுசெய்த தொழில்நுட்பர், "வேறு வழியேயில்லை, கணினியின் வன்தட்டை (hard drive) மாற்றியாக வேண்டும். அப்படிச் செய்வது கணினியை பூர்வ நிலைக்குத் திருப்பிவிடும்" என்றார். அதாவது, நான் சேமித்த வைத்த அநேக தகவல்களை நான் இழக்க நேரிட்டாலும், அது புத்தம்புதியதைப் போன்று வேலைசெய்யும் என்பதாகும். வெளிப்புறமாக பழையதாயிருந்தாலும், உள்ளே அது புதுப்பிக்கப்பட்டிருந்தது.

தேவனின் மன்னிப்பும் கிட்டத்தட்ட இதைப்போலத்தான். நாம் பாவம் செய்து நமது விருப்பப்படி வாழ்ந்தோம். ஆனால், நமது இயலாமையையும் குறைவையும் அறிக்கை செய்கையில் அவர் நம்மை "நமது பூர்வ நிலைக்கு" திருப்புகிறார். அவர் நமக்குப் புதிய துவக்கத்தையும், புதிய மனதையும், இரண்டாம் வாய்ப்பையும் அருளுகிறார். நமது சரீரங்கள் முதுமையடைந்து பழையதாகலாம், ஆனால் நமது உள்ளங்களோ, அவை சிருஷ்டிக்கப்பட்ட நாளிலிருந்தது போலவே புதியதாய் அதின் பூர்வ இயல்பிற்குத் திரும்பும். "உங்களுக்கு நவமான இருதயத்தைக் கொடுத்து, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியைக் கட்டளையிட்டு, கல்லான இருதயத்தை உங்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப்போட்டு, சதையான இருதயத்தை உங்களுக்குக் கொடுப்பேன்" (எசேக்கியேல் 36:26) என்று அவர் வாக்குரைத்தபடியே நடக்கும்.

நாம் ஒன்று கூடுகையில்

2015 ஆம் ஆண்டின் ஒரு ஆய்வின்படி இந்தியாவிலேயே மகிழ்ச்சியான நகரமாகச் சண்டிகர் நகரம் தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த ஆய்வறிக்கையின்படி, சண்டிகர் மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாகத் தங்கள் நேரத்தை செலவிட்டனர். மேலும் தங்கள் நண்பர்களுடனும், குடும்பத்தினருடனும் கொண்டுள்ள உறவை அதிகம் மதித்தனர். நீங்கள் சண்டிகர் சென்றால், வாரவிடுமுறைகளில் மதிய உணவோ அல்லது இரவு உணவோ ஒன்றாக உண்ணும் அநேக குடும்பங்களை உணவகங்களில் காணலாம். தங்களுக்குப் பிரியமானவர்களுடன் ஒன்றாக அமரும் நேரங்கள் இவர்கள் உள்ளங்களைப் பூரிக்கச் செய்தது.

எபிரெய ஆக்கியோன், ஒரே சமூகமாக ஒன்றுகூடுவதை ஊக்குவிக்கிறார். கிறிஸ்துவை பின்பற்றுபவர்கள் தங்கள் விசுவாசத்தில் பொறுமையோடிருக்க வேண்டிய கடினமான நாட்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை ஒப்புக்கொள்கிறார். நமது இரட்சகர் மீதுள்ள விசுவாசத்தின் மூலம் தேவனால் நாம் ஏற்றுக்கொள்ளப்பட்டோம் என்ற நிச்சயத்தை இயேசு நமக்களித்திருந்தாலும் வெட்கம், சந்தேகம் மற்றும் எதிர்ப்புகளோடு நமக்குப் போராட்டங்களுண்டு. நாம் ஒன்று கூடி வருவதால் ஒருவரையொருவர் ஊக்குவிக்கும் பாக்கியம் நமக்குண்டு. விசுவாசிகளோடு பகிர்ந்துகொள்வதால், "அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனித்து" (எபிரெயர் 10:24) இருக்க முடியும். இது நமது விசுவாசத்தை உறுதிப்படுத்தும்.

நண்பர்களுடன் ஒன்றுகூடுவது என்பது எப்போதும் நமக்கு சந்தோஷம் அளிக்காது. எனினும், இது வாழ்வின் விரக்திகளின் மத்தியில் நமது விசுவாசத்தைக் காத்துக்கொள்ள வேதம் காட்டும் ஒரு வழிமுறையாகும். நமது சபையின் சமூகமாக ஒன்றுகூடுதலுக்கும், உள்ளங்கள் பூரிக்கும் எளிய கூடுகைகளுக்கும் நமது வீடுகளைத் திறந்து கொடுப்பதற்கு இதைவிட மேலான காரணம் உண்டோ?