சர்வதேச விண்வெளி மையத்திற்குப் பயணிக்கும் குழுவின் தலைவரும் விண்வெளி வீரருமான, கிறிஸ் பெர்குசன், ஒரு கடினமான முடிவெடுத்தார். அந்த முடிவு அவர்களுடைய விண்கலத்தைக் குறித்தோ அல்லது சகவிண்வெளி வீரர்களின் பாதுகாப்புக் குறித்தோ அல்ல. மாறாக, அவர் மிகமுக்கியமானதாய்க் கருதிய அவர் குடும்பத்தைப் பற்றியதே. தம் மகளின் திருமணத்திற்காக பயணத்தை ரத்துசெய்து, பூமியிலேயே இருக்க அவர் முடிவெடுத்தார்.

கடினமான முடிவுகளை எடுக்கும் சூழ்நிலைகளை நாம் அனைவருமே எதிர்கொள்வோம். நமது வாழ்வில் எது மிக முக்கியமென்று நாமே முடிவுசெய்யும் காரியங்கள் அவை.  ஏனெனில், ஒன்றை இழந்துதான் மற்றொன்றைப் பெற்றுக்கொள்ள முடியும். தம்மைச் சுற்றி இருந்த ஜனக்கூட்டத்திற்கும், தம்மை விசுவாசிப்பவர்களுக்கும் ஒரு முக்கியமான காரியத்தை இயேசு கூறினார். ஒருவன் அவரைப் பின்பற்ற விரும்பினால் “தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன்.” (மாற்கு 8:34) என்றார். கிறிஸ்துவைப் பின்பற்றுவதில் செய்யப்படவேண்டிய தியாகங்களிலிருந்து தப்பித்துக்கொள்ளாமல், மிக முக்கியமென்று தெரிவு செய்வதற்கு விலைக்கிரயம் செலுத்தப்படவேண்டுமென்று அவர்களுக்கு நினைப்பூட்டினார். 

நமக்கு விலையேறப்பெற்றதாய்த் தோன்றும் அநேக காரியங்களைப் பின்தொடர அடிக்கடி நாம் தூண்டப்படுகிறோம். அவை நாம் இயேசுவைப் பின்பற்றுவதிலிருந்து நம்மை திசைதிருப்புபவையே. எனவே நமது அனுதின தெரிவுகளில் தேவனின் நடத்துதலைக் கேட்டு, ஞானமாய் தெரிவு செய்து அவரை கனப்படுத்துவோம்.