மும்பையின் தெருக்களில் இருந்த சிறு பிள்ளைகளை உற்சாகமூட்ட, அவர்கள் பெயர்களை வைத்தே ஒரு பாடலை ரஞ்சித் இயற்றினான். ஒவ்வொரு பெயருக்கென ஒரு இசையமைத்து, அதின் ராகத்தையும் அவர்களுக்குக் கற்றுக்கொடுத்தான். அவர்களுடைய பெயரை அவர்கள் நினைக்கையில், ஒரு உத்வேகம் அவர்களுக்கு உண்டாகுமென்று, இப்படிச் செய்தான். தங்கள் பெயரைச் சரியாகக் கூட உச்சரிக்கத் தெரியாமல் இருந்த அவர்களுக்கு, இது ஒரு கௌரவமாகவே இருந்தது.

வேதத்தில் பெயர்கள் மிகவும் முக்கியமானவை. ஏனெனில், பொதுவாக அவை அவர்களின் பண்புகளையோ அல்லது செய்த செயல்களையோ பிரதிபலிக்கும். உதாரணமாக தமது அன்பின் உடன்படிக்கையை ஆபிராமோடும், சாராயோடும் தேவன் ஏற்படுத்துகையில், அவர்கள் பெயர்கள் மாற்றப்பட்டன. “மேன்மைமிகு தந்தை” என்ற அர்த்தமுடைய ஆபிராம், “அநேகருக்குத் தந்தை” என்ற அர்த்தமுடைய ஆபிரகாமாக மாற்றப்பட்டார். மேலும் “இளவரசி” எனும் பொருள்கொண்ட சாராய், “அநேகருக்கு இளவரசி” எனும் சாராளாக மாற்றப்பட்டாள். (பார்க்கவும்.ஆதியாகமம் 17:5, 15). 

தேவன் அவர்களுக்கு இட்ட புதுப் பெயர்கள், இனி அவர்கள் பிள்ளையில்லாமலிருப்பதில்லை என்ற கிருபையின் வாக்குத்தத்தத்தோடு இருந்தன. சாராள் பிள்ளை பெற்றபின், அவர்களுடைய மட்டற்ற மகிழ்ச்சியினால் அவனுக்கு “ஈசாக்கு” என்று பெயரிட்டனர். அதின் அர்த்தம், “அவன் நகைக்கிறான்” என்பதாகும். சாராள், “தேவன் என்னை நகைக்கப்பண்ணினார்; இதைக் கேட்கிற யாவரும் என்னோடேகூட நகைப்பார்கள் (ஆதியாகமம் 21:6) என்றார்.

ஜனங்களை அவர்களுடைய பெயரால் அழைக்கையில், அவர்களுக்கு கனத்தையும் மரியாதையையும் நாம் தருகிறோம். மேலும், தேவன் அவர்களை யாராக இருக்கவேண்டுமென்று படைத்ததையும் உறுதிப்படுத்துகிறோம். அவர்கள் தேவனுடைய சாயலை பிரதிபலிப்பதால், அவர்களுடைய தனித் தன்மையை உணர்த்தும் புனைப் பெயர்களும் உண்டு.