லைன் ஆப் டூட்டி என்ற ஆங்கில நாடகம் நிறைவுபெறுகையில், ஒரு பெருங்கூட்டம், அந்த நாடகத்தில், குற்றங்களுக்கு எதிரான போராட்டம் எப்படி முடிவுபெறுமென்று காண ஆவலாய் கூடியிருந்தனர். இறுதியில் தீமையே வெல்லுமென்ற முடிவில் நிறைவடைந்த நாடகத்தால், அநேகர் ஏமாற்றமடைந்தனர். “குற்றவாளிகள் நியாயத்திற்குமுன் நிறுத்தப்பட்டிருக்க வேண்டும். எங்களுக்கு நன்மை வெல்லுகிற முடிவு வேண்டும்” என்று ஒரு ரசிகர் கூறினார்.

“நாம் நீதிக்கும் நியாயத்திற்கும் ஏங்குகிறோம், ஒருநாள் தீமையானது முற்றிலும் மேற்கொள்ளப்பட்டு, தீயவர்கள் தங்கள் குற்றத்திற்காகத் தண்டிக்கப்பட வேண்டும். தீயவர்கள் ஜெயிப்பார்கள் என்பது உலகவழக்கத்திற்கு எதிரானது” என்று சமூகவியலாளர் பீட்டர் பெர்கர் ஒருமுறை குறிப்பிட்டார். இந்த நாடகத்தால் ஏமாற்றமடைந்த ரசிகர்கள், இந்த உலகம் மீண்டும் சீர்பெற வேண்டுமென்ற மானுட ஏக்கத்தை தங்களையறியாமலேயே வெளிக்காட்டினர்.

பரமண்டல ஜெபத்தில், இயேசுவும் தீமையைக் குறித்து யதார்த்தமாய் சொல்கிறார். தீமைக்கு மன்னிப்பு மட்டும் போதுமானதன்று (மத்தேயு 6:12) மாறாகத் தீமையிலிருந்து ஒரு பெரிய விடுதலையும் தேவை (வ.13). இந்த யதார்த்தத்திற்கு ஒரு நம்பிக்கையும் உண்டு. தீமையேயில்லாத இடமொன்று உண்டு, அதுதான் பரலோகம். அந்த பரலோக ராஜ்யம் இந்த பூமிக்கு வரப்போகிறது (வ.10). ஒரு நாள் தேவனின் நியாயம் முழுமையாய் வெளிப்படும், “நன்மை ஜெயிக்கும்” என்ற முடிவு வரும், நன்மைக்கேதுவாக தீமை முற்றிலும் வேரறுக்கப்படும் (வெளிப்படுத்தல் 21:4).

ஆகவே நம் வாழ்விலும் தீயவர்கள் மேற்கொள்ளும்போது, ஏமாற்றமே நமக்கு மிஞ்சுகையில், ” தேவனின் சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோலப் பூமியிலேயும் செய்யப்படட்டும்” என்பதை நினைவில் கொள்வோம். நமக்கு நம்பிக்கை உண்டு,ஏனென்றால் கதை இன்னும் முடிவடையவில்லை.