மிகவும் பிரசித்திபெற்ற விளையாட்டு செய்திப் பத்திரிக்கையாளர் டேவ் கிண்ட்ரேட், பல முக்கியமான போட்டிகளையும், சாதனைகளையும், முகமது அலியின் சுயசரித்திரத்தையும் தொகுத்து எழுதியுள்ளார். பணிஓய்வுபெற்றபின் சலித்துப்போன அவர், அருகேயிருந்த பள்ளியில் பெண்களுக்கான கூடைப்பந்து போட்டிகளைக் காணச் செல்வார். விரைவில் அந்த ஒவ்வொரு போட்டியைக் குறித்தும் எழுதி இணையத்தில் வெளியிடத் துவங்கினார். டேவின் தாயாரும், பேரனும் அடுத்தடுத்து இறந்துபோக, அவருடைய மனைவியும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். இந்தச் சூழலில், அவர் எழுதிவந்த அந்தக் கூடைப்பந்து விளையாட்டுக் குழுவினரால் சமூகப்பொறுப்பும் வாழ்வின் நோக்கமும்பெற்று ஊக்கமடைந்தார். இவருக்கு அவர்கள் தேவைப்பட்டனர், அவர்களுக்கும் இவர் தேவைப்பட்டார். “என் வாழ்வே இருளடைந்திருந்தபோது, இந்தக் கூடைப்பந்து அணியினர் தான் எனக்கு வெளிச்சமாயிருந்தார்கள்” என்று டேவ் கூறினார்.
இவ்வளவு பிரசித்திபெற்ற ஒரு நிருபர் எப்படி ஒரு கூடைப்பந்து விளையாட்டுக் குழுவைச் சார்ந்துகொள்ளும்படி மாறினார்? அப்படியே அப்போஸ்தலனாகிய பவுல், மிஷனரி பயணத்தில் தான் சந்தித்தவர்களின் ஐக்கியத்தைச் சார்ந்துகொண்டார். தம்முடைய நிருபத்தின் முடிவுரையில் பவுல் குறிப்பிட்டு வாழ்த்திய நபர்களைக் கவனித்தீர்களா? (ரோமர் 16:3–15). “என் இனத்தாரும் என்னுடனேகூடக் காவலில் கட்டுண்டவர்களுமாயிருக்கிற அன்றோனீக்கையும் யூனியாவையும் வாழ்த்துங்கள்.”(வ.7) என்று எழுதினார். “கர்த்தருக்குள் எனக்குப் பிரியமான அம்பிலியாவை வாழ்த்துங்கள்.” (வ.8) என்றார். அவர் சுமார் இருபத்தைந்து நபர்களுக்கும் மேலானவர்களைக் குறிப்பிடுகிறார். இவர்களில் அநேகரைக் குறித்து வேதத்தில் ஒன்றுமேயில்லை. ஆனால் பவுலுக்கு இவர்கள் தேவைப்பட்டனர்.
நீங்கள் யாரைச் சாருகிறீர்கள்? உங்கள் சபையிலிருந்து இதைத் துவங்குங்கள். அங்கே யாருடைய வாழ்வாவது இருண்டுள்ளதா? இயேசுவிடம் அவர்களை நடத்தும் வெளிச்சமாக தேவன் உங்களை நடத்துவாராக. அவர்கள் ஒருநாள் உங்களுக்கும் பயன்படுவார்கள்.
நீங்கள் நம்பக்கூடிய உங்களுக்குப் பரிச்சயமானவர்கள் யார்? அதுபோன்ற நண்பர்களை தேவனிடம் கேளுங்கள். நீங்கள் அப்படிப்பட்ட நண்பராய் எப்படி மாறுவீர்கள்?
பிதாவே, இயேசு எனக்கு நண்பராயிருக்கிறதுபோல, நானும் நல்ல நண்பனாயிருக்க எனக்கு உதவும்.