ரோம பேரரசர் கான்ஸ்டான்டின் (கி.பி.272–337), தம்முடைய வாழ்வின் பெரும்பகுதியை, தேவனை அறியாதவராகவே செலவிட்டிருந்தாலும், கிறிஸ்தவர்களை உபத்திரவப்படுத்தும் வழக்கத்தை மாற்றி, மறுமலர்ச்சி ஏற்படுத்தினார். மேலும், இன்றும் நாம் உபயோகிக்கும் கால அட்டவணையை கி.மு (கிறிஸ்துவுக்கு முன்) கி.பி (கிறிஸ்துவுக்கு பின்) என்று சரித்திரத்தையே இரண்டாய் பகுத்துக் கொடுத்தார்.
இந்த முறையை உலகப்பிரகாரமான வழக்கமாக மாற்றும் ஏற்பாடாகக் கால அட்டவணையை பொது சகாப்தம் (CE), பொது சகாப்தத்திற்கு முன் (BCE) என மாற்றிவிட்டனர். தேவனை எவ்வாறெல்லாம் உலகம் தவிர்க்கிறது என்பதற்கு உதாரணமாகச் சிலர் இதைக் குறிப்பிடுவர்.
ஆனால் தேவனைத் தவிர்க்கவே முடியாது. எவ்வாறாகப் பெயரை மாற்றினாலும் காலத்தின் நடுமையத்தை நிர்ணயிப்பது, இயேசு இவ்வுலகில் வாழ்ந்த நாட்களே. வேதாகமத்தில், எஸ்தர் புத்தகத்தில் தேவன் என்ற சொல்லேயில்லாமல் இருப்பது சற்று முரண்பாடாய் தோன்றலாம். ஆனால் அதிலுள்ள சரித்திரமே தேவன் அளித்த விடுதலையைப் பற்றியதுதான். சொந்த தேசத்தை விட்டுத் துரத்தப்பட்டவர்களாக, அந்நிய தேசத்தில் யூதர்கள் வாழ்ந்தார்கள். அந்த அரசாங்கத்தின் சக்திவாய்ந்த அதிகாரி அவர்களைக் கொல்லப் பார்த்தான் (எஸ்தர் 3:8–9, 12–14). ஆயினும் எஸ்தர் ராஜாத்தி மூலமாகவும், அவளுடைய அண்ணன் முறையான மொர்தெகாய் மூலமாகவும் தேவன் தமது ஜனத்தை விடுவித்தார். இதன் நினைவாக பூரிம் எனும் யூத பண்டிகையையும் இந்நாள் வரைக்கும் கொண்டாடுகின்றனர் (9:20–32).
இப்போது உலகம் இயேசுவை எவ்வாறாக மதிப்பிட்டாலும் சரி, அவர் அனைத்தையும் மாற்றிவிட்டார். இப்போது அவர் நம்மை ஒரு வழக்கத்திற்கு மாறான ஒரு சகாப்தத்திற்கு அழைக்கிறார், அங்கே உண்மையான நம்பிக்கையும் வாக்குறுதியும் உண்டு. நாம் செய்ய வேண்டியதெல்லாம் அவரை நம்மைச் சுற்றிலும் பார்ப்பதுதான், அப்போது நாம் அவரை காண்போம்.
தேவன் புறக்கணிக்கப்படுவதாகத் தோன்றும் சூழல்களில் நீங்கள் என்ன செய்வீர்கள்? அவரை இன்று எவ்வாறெல்லாம் காண்கிறீர்கள்?
பிதாவே, சரித்திரத்தையே புரட்டிப்போட்ட, உமது குமாரன் இயேசுவாகிய சத்தியத்திற்காக நன்றி.