எனது பூக்களை ஏதோவொன்று அரித்துக்கொண்டிருந்தது. நேற்றுதான் கம்பீரமாகத் தலைதூக்கிப் பூத்தன, இன்றோ தலையில்லாமல் தண்டுப்பகுதி மட்டுமே நின்றது. எனது தோட்டத்தை முழுதும் அலசி ஆராய்ந்த போதுதான், வேலியில் உள்ள ஒரு ஓட்டையைக் கண்டுபிடித்தேன். அதற்குக் காரணமான முயல்கள், பார்க்க அழகானவைதான், ஆனால் தோட்டத்தின் மொத்த மலர்களையும் நிமிடத்தில் அழிக்கும் ஆபத்துவாய்ந்தவை.
எனது வாழ்வில் ‘தேவனுடைய சுபாவங்கள்’ எனும் மொட்டுகளைக் கத்தரிக்கும் ஊடுருவல்கள் உண்டோவென்று சிந்திக்கிறேன். “தன் ஆவியை அடக்காத மனுஷன் மதிலிடிந்த பாழான பட்டணம் போலிருக்கிறான்.” என்று நீதிமொழிகள் 25:28 கூறுகிறது. பண்டைய காலத்தில், பட்டணங்களின் மதில்களே மக்களை எதிரிகளின் தாக்குதலிலிருந்து காத்தன. மதிலில் உண்டாகும் சிறிய பிளவுகூட மொத்த பட்டணத்தின் அழிவிற்கும் காரணமாகிவிடும்.
வேதாகமதிலுள்ள நீதிமொழிகளில் அநேக நீதிமொழிகள் இச்சையடக்கத்தைப் பற்றிக் கூறுகிறது. “தேனைக் கண்டுபிடித்தாயானால் மட்டாய்ச் சாப்பிடு” (நீதிமொழிகள் 25:16) என்று ஞானி எழுதினார். பொறுமையின்மை, கசப்பு, பேராசை ஆகிய இக்காரியங்கள், ஒரு பூச்சியைப்போல தேவனுக்குள் வெற்றியுள்ள ஜீவியத்தை நாம் செய்ய முடியாமல் தடுக்கிறது (கலாத்தியர் 5:22–23 பார்க்கவும்). நமது வாழ்வெனும் மதிலில் உள்ள ஓட்டைகளைக் கவனித்து, அவைகளைச் சீரமைக்கும் ஆரோக்கியமான மனநிலையே இச்சையடக்கமாகும்.
எனது வாழ்வைப் பரிசோதிக்கையில், என்னைப் பாதிக்கக்கூடிய ஓட்டைகளை ஆங்காங்கே காண்கிறேன். ஒரே சோதனையில் மீண்டும் மீண்டுமாய் விழுகிறேன், பொறுமை இழக்கிறேன். இச்சையடக்கமெனும் தேவனுக்குள்ளான ஆரோக்கியமான மனநிலை, என்னை இதுபோன்ற தடைகளிலிருந்து காக்க எவ்வளவு அவசியம்!
உங்கள் இதயமெனும் மதிலில் எவ்வகையான ஓட்டைகளைக் காண்கிறீர்கள்? இத்தகைய ஊடுருவலிலிருந்து, தேவனின் கனியாகிய இச்சையடக்கம் எவ்வாறு காக்குமென்று எண்ணுகிறீர்கள்?
அன்புதேவனே, தவறான ஊடுருவல்களிலிருந்து என்னைக்காக்கும் இச்சையடக்கம் எனும் கனியை என்னில் வளரச்செய்யும்.