1937 ல் வான்டெரெர் w24 என்ற மாடல் காருக்கு ஒரு பெரும் சரித்திர பின்னணி இருந்தது. பிரிட்டிஷ் அரசால் வீட்டுக்காவலில் அடைபட்டிருந்த நேதாஜி, கொல்கத்தாவிலிருந்த தனது பாரம்பரிய வீட்டிலிருந்து தப்பிக்க, இந்த வாகனம்தான் உதவியது. இந்த சரித்திர உண்மையால் பூரித்த ஆடி நிறுவனம், சுமார் ஆறுமாதங்கள் செலவழித்து இந்தக் காரை சீராக்கியது. நேதாஜி தப்பித்த சம்பவத்தை நினைவுகூரும் 75 ஆம் ஆண்டான, 2017 ஆம் ஆண்டில், முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் பிரணாப் முக்கர்ஜீ, இந்த அறியக் கண்டெடுப்பை மக்கள் பார்வைக்கு வெளிக்கொண்டு வந்தார்.

பொக்கிஷங்கள் பலவகைகளில் மறையலாம். 2 நாளாகமத்தில் தொலைந்த பொக்கிஷம் ஒன்று மீண்டும் கண்டெடுக்கப்பட்டதை நாம் வாசிக்கிறோம். யோசியா இஸ்ரவேலின் ராஜாவாகி பதினெட்டு ஆண்டுகள் கழித்து, எருசலேமின் தேவாலயத்தைப் பழுதுபார்த்தான். நியாயப்பிரமாணப் புஸ்தகம் எனப்படும் பழைய ஏற்பாட்டின் முதல் ஐந்து புத்தகங்கள், எதிரிகளின் தொடர்தாக்குதல் காரணமாகப் பலஆண்டுகளாக மறைந்து, மறக்கப்பட்டுப்போனது. அப்பொழுது இல்க்கியா என்ற ஆசாரியன், கர்த்தருடைய ஆலயத்திலே அதைக் கண்டெடுத்தான் (2 நாளாகமம் 34:15).

இந்தக் கண்டெடுப்பைக் குறித்து யோசியாவுக்கு அறிவிக்கப்பட்டபோது, அதன் முக்கியத்துவத்தை உணர்ந்துகொண்டான். அப்போது அவன், இஸ்ரவேல் ஜனங்களனைவரும், நியாயப்பிரமாணப் புஸ்தகத்தில் எழுதியுள்ள அனைத்துக் காரியங்களுக்கும் கீழ்ப்படியும்பொருட்டு, முழுப்புஸ்தகத்தையும் வாசித்துக் கேட்பதற்காக, அவர்களை ஒன்று திரட்டினான் (வ.30–31).

இன்றும் நமது வாழ்வின் விலைமதிப்பற்ற பொக்கிஷமான, வேதத்தின் அறுபத்தாறு புஸ்தகங்களை வாசிக்கும், வியத்தகு ஆசீர்வாதம் நமக்குக் கிடைத்திருக்கிறது.