நான் அந்தப் புற்றுநோய் சிகிச்சை மையத்தை அடைந்தபோது தனிமையையும், பயத்தையும் அதிகம் உணர்ந்தேன். ஏனெனில், அங்கே எனது தாயாரை தனியொருத்தியாகப் பராமரிக்க வேண்டியிருந்தது. எனது குடும்பத்தையும், பரிச்சயமான சூழலையும் விட்டு சுமார் 1200 கி.மீ தூரம் கடந்து வந்துள்ளேன். ஆனால் நான் எனது சாமான்களை அவ்விடத்தில் இறக்குமுன்பே, மணி என்ற அந்த மனிதர் ஒரு பெரிய புன்னகையுடன் எனக்கு உதவ முன்வந்தார். நாங்கள் ஆறாவது தளத்திற்கு வந்தடைந்த போது, அவருடைய சிகிச்சைக்கு உறுதுணையாயிருந்த, அவரது மனைவி பாக்கியாவைப் பார்க்க வேண்டும் என முடிவு செய்தேன். நாங்கள் தேவனுக்குள் ஒருவரோடொருவர் சார்ந்திருந்ததால், இந்தத் தம்பதியினர் எனக்கு ஒரு குடும்பமாகவே சீக்கிரம் மாறிவிட்டனர். நாங்கள் ஒன்றாகவே சிரித்தோம், பகிர்ந்தோம், அழுதோம், ஜெபித்தோம். நாங்கள் அனைவரும் வெவ்வேறு இடத்திலிருந்து வந்திருந்தாலும், தேவனுக்குள் ஒருவரோடொருவர் இணைக்கப்பட்டிருந்ததால், அன்பில் வேரூன்றப்பட்டு ஒருவரையொருவர் தாங்கிக்கொள்ள முடிந்தது.
தனது மாமியாகிய நகோமியை பராமரிக்க ரூத் தீர்மானித்ததால், தனக்குப் பாதுகாப்பாயிருந்த பரிச்சயமான சூழலை விட்டு வெளியேறினாள். “அவள் போய், வயல்வெளியில் அறுக்கிறவர்கள் பிறகே பொறுக்கினாள்;” (ரூத் 2:3). அந்த வயலின் எஜமானான போவாஸிடம் அவன் வேலைக்காரன் வந்து, “காலமே துவக்கி இதுவரைக்கும் இங்கே இருக்கிறாள்; இப்பொழுது அவள் குடிசைக்கு வந்து கொஞ்சநேரந்தான் ஆயிற்று என்றான்” (வ.7). நகோமிக்காகத் தான் அக்கறைப்பட்டது போலவே, தனக்காக அக்கறைகொள்ளும் மனிதர்கள் உள்ள பாதுகாப்பான இடத்தை ரூத் கண்டுகொண்டாள் (வ. 8–9). போவாஸின் பெருந்தன்மையைக் கொண்டு ரூத்தையும், நகோமியையும் தேவன் போஷித்தார் (வ.14–16).
வாழ்வின் சூழல்கள் நம்மை நமது சௌகரியமான சூழலைத் தாண்டிக் கொண்டு செல்லும். நாம் தேவனுக்குள் ஒருவரோடொருவர் இணைந்திருந்தால், நம்மை அன்பில் வேரூன்றச்செய்து, ஒருவருக்கொருவர் ஆதரவாய் இருக்கும்படி செய்வார்.
நீங்கள் தனிமையாக இருந்தபோது தேவன் எவ்வாறு உங்களுக்கு ஆறுதல் கூறினார்? நீங்கள் அவருடைய அன்பில் நிலைத்திருப்பதற்கு மனிதர்களைக் கொண்டு தேவன் எவ்வாறு உதவினார்?
அன்பின் பிதாவே, நீர் என்னோடு இருந்து எனக்குத் தேவையான அனைத்தையும் கொடுப்பேன் என்று வாக்குக் கொடுத்தமைக்காக உமக்கு நன்றி.