சமீபத்தில் எனது கணினி பழுதடைந்ததால், அதை நானே சரிசெய்ய முயன்றேன். சில காணொளிகளின்மூலம் அதைக் கற்றுக்கொள்ள முயன்றேன். ஆனால் அவை பலனளிக்காமல் போகவே, என்னுடைய சில நண்பர்களை உதவிக்கு அணுகினேன். அம்முயற்சிகளும் வீணாய்ப்போனபின், இறுதியாக வேறுவழியின்றி அருகிலிருந்த ஒரு சேவை மையத்தை அணுகினேன். நன்றி கூறும் வண்ணமாக, எனது கணினிக்குச் சேவை உத்தரவாதம் இருந்தது.
பழுதை ஆய்வுசெய்த தொழில்நுட்பர், “வேறு வழியேயில்லை, கணினியின் வன்தட்டை (hard drive) மாற்றியாக வேண்டும். அப்படிச் செய்வது கணினியை பூர்வ நிலைக்குத் திருப்பிவிடும்” என்றார். அதாவது, நான் சேமித்த வைத்த அநேக தகவல்களை நான் இழக்க நேரிட்டாலும், அது புத்தம்புதியதைப் போன்று வேலைசெய்யும் என்பதாகும். வெளிப்புறமாக பழையதாயிருந்தாலும், உள்ளே அது புதுப்பிக்கப்பட்டிருந்தது.
தேவனின் மன்னிப்பும் கிட்டத்தட்ட இதைப்போலத்தான். நாம் பாவம் செய்து நமது விருப்பப்படி வாழ்ந்தோம். ஆனால், நமது இயலாமையையும் குறைவையும் அறிக்கை செய்கையில் அவர் நம்மை “நமது பூர்வ நிலைக்கு” திருப்புகிறார். அவர் நமக்குப் புதிய துவக்கத்தையும், புதிய மனதையும், இரண்டாம் வாய்ப்பையும் அருளுகிறார். நமது சரீரங்கள் முதுமையடைந்து பழையதாகலாம், ஆனால் நமது உள்ளங்களோ, அவை சிருஷ்டிக்கப்பட்ட நாளிலிருந்தது போலவே புதியதாய் அதின் பூர்வ இயல்பிற்குத் திரும்பும். “உங்களுக்கு நவமான இருதயத்தைக் கொடுத்து, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியைக் கட்டளையிட்டு, கல்லான இருதயத்தை உங்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப்போட்டு, சதையான இருதயத்தை உங்களுக்குக் கொடுப்பேன்” (எசேக்கியேல் 36:26) என்று அவர் வாக்குரைத்தபடியே நடக்கும்.
உங்கள் வாழ்வின் எந்தப் பகுதிகளில் தேவனின் புதுப்பித்தல் தேவைப்படுகிறது? அவருடைய உதவியையும், புதிதாக்குதலையும் நாடுவதில் உங்களைத் தடைசெய்வது என்ன?
அன்பு தகப்பனே, என்னைப் பழுதாக்கும் அனைத்து பாவத்தையும் நீக்கி, கிறிஸ்துவிலுள்ள மெய்யான எனது நிலைக்கு என்னைப் புதுப்பிக்குமாறு உம்மை வேண்டுகிறேன்.