ஸ்ரீதேவி சிறுபிராயத்திலிருந்தே பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டிருந்ததால் அவளுடைய கழுத்து முதல் கால்வரை செயலிழந்திருந்தது. மற்றப் பிள்ளைகள் வெளியில் மகிழ்ச்சியோடு விளையாடும்போது, இவள் மட்டும் மற்றவர்களை சார்ந்தே, குறிப்பாய் அவளுடைய அப்பாவை சார்ந்தே வாழவேண்டியிருந்தது. அவளுடைய கிராமத்தில் திரையிடப்பட்ட கருணாமூர்த்தி என்னும் கிறிஸ்துவின் வாழ்க்கைக் கதை அவளுடைய வாழ்க்கையைத் தொட்டது. அவள் கிறிஸ்துவுக்கு தன்னுடைய வாழ்க்கையை ஒப்புக்கொடுத்தாள். அதன் பின்பு, அவளை சந்திக்கும் யாவருக்கும் அவள் கிறிஸ்துவின் ஸ்தானாதிபதியாய் விளங்கினாள்.
அவள் தன்னுடைய அனுபவத்திலிருந்து, உபத்திரவம் என்பது எல்லோருக்கும் பொதுவானது, ஆனால் தேவனால் நேசிக்கப்படுகிறவர்களை அவர் கைவிடுவதில்லை என்பதைக் கற்றுக்கொண்டாள். சோர்ந்து போய் அவளிடம் வருபவர்களிடமெல்லாம் தேவ அன்பை பகிர்ந்து கொள்வாள். அவளுடைய வாழ்க்கையின் இறுதியில், 180 பேர் அவள் மூலமாய் இயேசுவை அறிந்துகொண்டார்கள். அதில் பெரும்பாலானவர்கள் மிஷனரிகளாகவும் ஊழியர்களாகவும் மாறியிருக்கின்றனர்.
மோசே உபத்திரவத்தையும் போராட்டங்களையும் சந்தித்தார். ஆனால் தேவப் பிரசன்னம் அவரோடிருப்பதை அவர் உணர்ந்தார். இஸ்ரவேலர்கள் மீதான தன்னுடைய தலைமைத்துவத்தை யோசுவாவிடம் ஒப்படைத்தபோது, “உன் தேவனாகிய கர்த்தர்தாமே உன்னோடேகூட வருகிறார்” (உபா. 31:6) என்று ஆலோசனை கூறினார். வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் பிரவேசிக்கும்போது, வல்லமை மிக்க எதிரிகளை அவர்கள் சந்திக்க நேரிடும் என்பதை அறிந்த மோசே, யோசுவாவிடம், “நீ பயப்படவும் கலங்கவும் வேண்டாம்” (வச. 8) என்று அறிவுறுத்தினார்.
இந்தப் பாவ உலகத்தில், கிறிஸ்துவின் சீஷர்கள் பாடுகளையும் போராட்டங்களையும் சந்திக்க வேண்டியுள்ளது. ஆனால் நம்மை பெலப்படுத்தும் ஆவியானவர் நம்மோடே இருக்கிறார். அவர் நம்மை விட்டு விலகுவதில்லை.
நீங்கள் பாடுகளை சந்திக்கும்போது, தேவனை எவ்வாறு விசுவாசிக்கிறீர்கள்? தேவன் உங்களுக்கு உண்மையுள்ளவராய் வெளிப்பட்டதை மற்றவர்களுடன் எவ்விதம் பகிர்ந்துகொள்ளுகிறீர்கள்?
பரலோகப் பிதாவே, நான் பாடுகளினால் சோர்ந்துபோகும்போது, நீர் என்னை விட்டு விலகுவதில்லை என்பதை உம்முடைய ஆவியைக்கொண்டு எனக்கு நினைவூட்டும்.