லாசி ஸ்காட், தனது ஊரில் இருந்த செல்லப்பிராணிகள் கடையிலிருந்தபோது, தொட்டியின் அடியில் ஒரு மீன் சோர்ந்திருப்பதைக் கண்டாள். அதின் செதில்கள் கருப்பாக மாறி, அதின் உடம்பில் காயங்கள் ஏற்பட்டிருந்தது. பத்து வயதான அந்த மீனை விலைக்கு வாங்கிய லாசி, அதற்கு “மான்ஸ்ட்ரோ” என்று பெயரிட்டு, அதை பிரத்யேகமான மீன் தொட்டியில் வைத்து தினமும் தண்ணீர் மாற்றி அதைப் பராமரித்தாள்.
மான்ஸ்ட்ரோவின் வளர்ச்சியில் மாற்றம் ஏற்பட்டு, அது மெல்லமாக நீந்த துவங்கி, உருவத்திலும் வளர்ச்சியடைந்தது. அதின் கருப்பு செதில்கள் தங்க நிறத்திற்கு மாறியது. லாசியின் அர்ப்பணிப்புமிக்க பராமரிப்பினால், மான்ஸ்ட்ரோ புதுப்பிக்கப்பட்டது.
லூக்கா 10ஆம் அதிகாரத்தில், கள்ளர்களால் காயப்பட்டு குற்றுயிராய் கிடந்த ஒரு மனிதனைக் குறித்த கதையை இயேசு சொல்லுகிறார். காயப்பட்ட அந்த மனிதனின் வேதனையைப் பொருட்படுத்தாமல், ஆசாரியனும் லேவியனும் அவனை கடந்து சென்றனர். ஆனால் ஒதுக்கப்பட்ட மக்கள் கூட்டத்தின் அங்கத்தினரான ஒரு சமாரியன், அவனைப் பராமரித்து, அவனுடைய தேவைக்கு பண உதவியும் செய்தான் (லூக்கா 10:33-35). அந்தக் கதையில் சமாரியனே உண்மையான நண்பன் என்று நமக்கு சொன்ன இயேசு, அதையே செய்யும்படி மக்களை வலியுறுத்தினார்.
மரிக்கும் தருவாயில் இருந்த அந்த மீனுக்கு லாசி செய்ததுபோல, தேவையிலுள்ளவர்களுக்கு நாமும் நன்மை செய்வோம். ஆதரவற்ற, வேலையில்லாத, செயலிழந்த, தனிமையிலிருக்கும் நண்பர்கள் அநேகர் நம்முடைய பாதையில் இருக்கிறார்கள். அவர்களின் சோகத்தை கண்டறிந்து, அவர்களை அக்கறையோடு பராமரிப்போம். அன்பான வாழ்த்துக்கள், பகிர்ந்துகொள்ளப்பட்ட உணவு, சிறு பண உதவிகள் ஆகியவற்றின் மூலம் எல்லாவற்றையும் மாற்றக்கூடிய தேவ அன்பை மற்றவர்களிடம் பகிர்ந்தளிக்கலாம்.
மற்றவர்களை அன்பான வழியில் அணுகுவது எப்படி? உங்களைச் சுற்றியுள்ள மக்களின் தேவையை எவ்வாறு தெரிந்துகொள்வாய்?
அன்பான தேவனே, என்னை புதிதாய் மாற்றியதற்காய் உமக்கு நன்றி! தேவையோடு இருக்கிறவர்களுக்கு உம்முடைய அக்கறையை பிரதிபலிக்கும் சிநேகிதனாய் நான் இருக்க எனக்கு உதவிசெய்யும்.