சுனில், வேடிக்கையான, புத்திசாலித்தனமான, எல்லோராலும் விரும்பப்படத்தக்கவன். ஆனால் அவன் மனவிரக்தியில் இருந்தது யாருக்கும் தெரியாமற்போயிற்று. அவன் தன்னுடைய 15ஆம் வயதில் தற்கொலை செய்துகொண்ட பின்னர், அவனுடைய தாயாராகிய பிரதீபா, “நாம் அதிகம் விரும்பும் ஒருவர் இப்படிச் செய்ததை கிரகிப்பது மிகவும் கடினமாயிருக்கிறது. சுனில்… அந்தத் தவறான முடிவிலிருந்து தன்னை விலக்கிக் கொள்ளவில்லை” என்று கூறுகிறார். பிரதீபா, பல நாட்கள் தனிமையில் தன்னுடைய வேதனையை தேவனிடத்தில் ஊற்றியிருக்கிறாள். தன்னுடைய மகனுடைய தற்கொலைக்குப் பின்னர், “ஒரு வித்தியாசமான துயரத்தை நான் அனுபவித்தேன்” என்று சொல்லுகிறாள். ஆனால், அவளும் அவள் குடும்பத்தினரும், அந்த மீளா துயரத்தின் மத்தியிலும், தேவனை சார்ந்து கொள்வது எப்படி என்று கற்றுக்கொண்டனர். தற்போது, மனச்சோர்வுக்குள்ளாகும் நபர்களைத் தேடி அவர்களை நேசிக்கவும், அதிலிருந்து அவர்களை மீட்கவும் உதவுகின்றனர்.
“நேசித்து சார்ந்து கொள்” என்பதே பிரதீபாவின் இலட்சியமாகும். இதே கருத்தை, பழைய ஏற்பாட்டில், ரூத்தின் சரித்திரம் எடுத்துரைக்கிறது. நகோமி தன்னுடைய கணவனையும் இரண்டு குமாரர்களையும் இழந்து நிற்கதியாய் நின்றாள். அவள் குமாரனில் ஒருவனைத்தான் ரூத் மணந்திருந்தாள் (ரூத் 1:3-5). கசப்பானவளாய் விரக்தியிலிருந்த நகோமி, ரூத்தை அவளுடைய இனத்தாரிடத்திற்கு திரும்பிப் போய் சுகமாயிருக்கும்படி. கேட்டுக்கொண்டாள். தன் கணவனை இழந்த விரக்தியிலிருந்த ரூத்தோ, தன் மாமியாரை விடாமல் பற்றிக்கொண்டு, அவளைப் பராமரித்தாள் (வச. 14-17). இருவரும் நகோமியின் சொந்த ஊரான பெத்லெகேமுக்கு வந்தனர். ரூத்துக்கு அது அந்நிய தேசமாயிருந்தது. ஆனால் அவர்கள் ஒருவரோடொருவர் அன்பாயிருந்து, தேவனை சார்ந்திருந்தனர், தேவன் அவர்களின் தேவையை சந்தித்தார் (2:11-12).
நம்முடைய துயரங்களில், தேவனுடைய அன்பு நமக்கு நிலையானதாக இருக்கிறது. நாம் எப்போதும் தேவனை சார்ந்து கொள்ள அவர் நம்மோடிருக்கிறார். தேவன் மற்றவர்களை தேற்றவும் நம்மை பெலப்படுத்துவார்.
உங்களுடைய துயரங்களில் தேவனை சார்ந்து கொள்வது உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது? யாருக்கு உங்களுடைய உதவி தற்போது தேவைப்படுகிறது?
தகப்பனே, என் மீதான உம்முடைய மெய்யான அன்பிற்காகவும் அக்கறைக்காவும் நன்றி. உம்மை நம்புவதற்கு மற்றவர்களை உற்சாகப்படுத்த எனக்கு உதவிசெய்யும்.