என்னுடைய அப்பா யாராலும் வீழ்த்தப்பட முடியாதவர் என்று நான் நம்பிய அந்த நாள் வந்தது. அவருடைய வலிமையையும் உறுதியினையும் ஒரு சிறுவனாய் நான் பார்த்திருக்கிறேன். நான் வளரும் தருவாயில் அவர் கீழே விழுந்து அவருடைய இடுப்பில் காயம் ஏற்பட்டது. அதன் பின்பு தான், அவரும் சாதாரணமானவர் என்பதை உணர்ந்தேன். நான் படுத்த படுக்கையான என் அப்பாவை கழிவறைக்கு அழைத்துச் செல்வது, உடைகள் மாற்றுவதில் உதவி செய்வது, தண்ணீரை அவருக்குக் குடிக்கக் கொடுப்பது போன்ற உதவிகளைச் செய்தேன். அது என்னுடைய அப்பாவுக்கு மிகுந்த விசனமாயிருந்தது. அவர் தானாகவே முன்வந்து சில காரியங்களை செய்ய முயற்சித்தார். ஆனால் அது முடியாததால், “நீ இல்லாமல் என்னால் ஒன்னும் செய்யமுடியவில்லை” என்பதை ஒப்புக்கொண்டார். கடைசியில், அந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து அவர் விடுபட்டார். ஆனால் அந்த அனுபவம் எங்கள் இருவருக்கும் ஒரு முக்கியமான பாடத்தைக் கற்பித்தது. நமக்கு மற்றவர்களின் உதவி தேவை என்பதே அந்த பாடம்.
மற்றவர்களின் உதவி எந்த அளவிற்கு அவசியமோ, அதே அளவிற்கு இயேசுவும் நமக்கு அவசியம். யோவான் 15ஆம் அதிகாரத்தில் திராட்சைச் செடியை குறித்தும் அதின் மீது படர்ந்திருக்கும் கொடிகளைக் குறித்தும் நாம் வாசிக்க முடியும். அது தேற்றக்கூடிய உதாரணமாய் அமைந்தாலும், நம்முடைய சுயத்தின் மீதான நம்பிக்கையை தகர்க்கக்கூடியதாய் இருக்கிறது. “எனக்கு உதவி தேவையில்லை” என்ற நம்முடைய சுயத்தின் மீதான நம்பிக்கையை உடைக்கிறதாயிருக்கிறது. என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது (வச. 5) என்று இயேசு தெளிவாய்ச் சொல்லுகிறார். ஒரு சீஷனுக்கு அவசியமான ஆவியின் கனிகளாகிய அன்பு, சந்தோஷம், சமாதானம் (கலாத்தியர் 5:22) போன்ற கனிகளைக் குறித்து இயேசு இவ்வாறு பேசுகிறார்.
இயேசு நம்மை கனிகொடுக்கும் வாழ்க்கை வாழவே அழைக்கிறார். அவரை நாம் முழுமையாய் சார்ந்துகொள்வோமாகில், பிதாவை மகிமைப்படுத்தக் கூடிய வாழ்க்கையை நம்மால் வாழ முடியும் (யோவான்15:8).
“நீர் இல்லாமல் என்னால் ஒன்றும் செய்யமுடியாது” என்பது எளிமையும் வலிமையுமான ஒரு ஜெபம். நீங்கள் இன்று சந்திக்கும் எந்த பிரச்சனைக்கு உங்களுக்கு ஜெபம் அவசியம்? தேவன் உங்களோடு இருக்கிறார், அவர் உங்களை நேசிக்கிறார் என்னும் இளைப்பாறுதலை நீங்கள் எவ்விதம் உறுதிசெய்துகொள்ள முடியும்?
தகப்பனே, உம்மையல்லாமல் என்னால் ஒன்றும் செய்ய இயலாது.