“எனக்கு ஒரு இருண்ட தருணம் இருந்தது.” இந்த ஐந்து வார்த்தைகள் கோவிட்-19 தொற்று பரவிய நேரத்தில், ஒரு பெண் பிரபலத்தின் உள் வேதனையைப் படம்பிடிக்கின்றது. இந்த புதிய வாழ்க்கை முறையை தழுவுவது அவளுக்கு சவாலாய் அமைந்தது. அவள் தற்கொலை எண்ணங்களோடு போராடினாள் என்று அவரே சொன்னார். இந்த இக்கட்டான மனநிலையிலிருந்து வெளிவருவதற்கு, தன் மீது அக்கறைகொண்ட ஒரு நண்பரிடம் தன்னுடைய நிலையை மனம்விட்டு பகிர்ந்துகொண்டதை அவர் குறிப்பிட்டிருந்தார்.

நாம் அனைவரும் இதுபோன்ற பரபரப்பான தருணங்கள், நாட்கள் மற்றும் பருவங்களை சந்திக்க நேரிடுகிறது. பள்ளத்தாக்குகள் மற்றும் கடினமான இடங்கள் நமக்கு புதிதல்ல, ஆனால் அதை மேற்கொண்டு வெளிவருவது சவாலான ஒன்றாகவே இருக்கிறது. சில வேளைகளில் மனநல நிபுணர்களின் உதவியை நாடுவதும் அவசியப்படுகிறது.

சங்கீதம் 143 இல், தாவீது தன்னுடைய வாழ்வின் ஒரு இருண்ட தருணத்தின் ஜெபத்தைக் கேட்டு அதின் மூலம் நாம் அறிவுறுத்தப்படுகிறோம். சரியான சூழ்நிலை எதுவென தெரியவில்லை. ஆனால் தேவனிடம் அவர் ஏறெடுத்த ஜெபங்கள் அனைத்தும் நேர்மையானவை, நம்பிக்கையானவைகள். “சத்துரு என் ஆத்துமாவைத் தொடர்ந்து, என் பிராணனைத் தரையோடே நசுக்கி, வெகுகாலத்துக்குமுன் மரித்தவர்கள்போல் என்னை இருளில் இருக்கப்பண்ணுகிறான். என் ஆவி என்னில் தியங்குகிறது; என் இருதயம் எனக்குள் சோர்ந்துபோகிறது” (வச. 3-4). விசுவாசிகளுக்கு, நமக்குள் என்ன நடக்கிறது என்பதை நமக்குள்ளேயோ, அல்லது நண்பர்களிடமோ அல்லது மருத்துவ நிபுணர்களிடமோ பகிர்ந்துகொள்வது மட்டும் போதாது. சங்கீதம் 143:7-10-ல் காணப்படும் விண்ணப்பங்களை உள்ளடக்கிய ஜெபங்களுடனும் முழு சிந்தையுடனும் நாம் தேவனிடம் வர வேண்டும். நமது இருண்ட தருணங்கள், தேவனால் மட்டுமே கொடுக்கக்கூடிய ஒளியை எதிர்நோக்கும் ஆழமான ஜெப நேரங்களாகவும் இருக்கலாம்.