முகேஷ், “கடவுள் இல்லை, மதம் இல்லை, எதுவும் இல்லை” என்ற நம்பிக்கையில் வளர்ந்தவர். தன்னுடைய மக்களுக்கு ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் தேடி, அமைதியான போராட்டங்களில் மாணவர்களை வழிநடத்த உதவினார். ஆனால் அவர் தலைமை தாங்கிய போராட்டங்கள் அரசாங்கத்தின் குறுக்கீட்டை சந்திக்க நேர்ந்தது. அதன் விளைவாய் நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியாகும் அவலம் நேர்ந்தது. அந்த அசம்பாவிதத்தினால் முகேஷின் பெயர் நாட்டின் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் இடம்பெற்றது. ஒரு குறுகிய சிறைவாசத்திற்குப் பிறகு, அவர் ஒரு வெளியூர் கிராமத்திற்குத் தப்பிச் சென்றார். அங்கு அவர் ஒரு வயதான விவசாய பெண்மணியை சந்தித்தார். அவர் இவருக்கு கிறிஸ்தவத்தை அறிமுகப்படுத்தினார். கைகளால் எழுதப்பட்ட யோவான் சுவிசேஷத்தின் நகல் மட்டுமே அவரிடம் இருந்தது. ஆனால் அவருக்கு படிக்கத் தெரியாது. அதை முகேஷிடம் கொடுத்து படித்துக் காட்டுமாறு கூறி, அவர் அதை படிக்க படிக்க, அதை முகேஷிக்கு விளக்கிச் சொன்னார். சரியாய் ஒரு வருடம் கழித்து, முகேஷ் இரட்சிக்கப்பட்டார்.
தான் கடந்த வந்த கடினமான பாதைகளிலும் தேவன் அவரை சிலுவையண்டை நடத்துவதற்கு அவரை பெலப்படுத்தியதை அவரால் உணரமுடிந்தது. பவுல் அப்போஸ்தலர் 1 கொரிந்தியரில் “சிலுவையைப்பற்றிய உபதேசம். . . தேவபெலன்” (1:18) என்று சொன்னதை அவர் நேரில் அனுபவிக்க முடிந்தது. முட்டாள்தனம், பலவீனம் என்று பலர் கருதியது முகேஷின் பலமாக மாறியது. நாம் கிறிஸ்துவுக்குள் வருவதற்கு முன்பு, நம்மில் சிலருக்கும் இதே சிந்தை இருந்திருக்கக்கூடும். ஆனால் ஆவியானவரின் மூலம், தேவனின் வல்லமையும் ஞானமும் நம் வாழ்வில் நுழைவதையும், அது கிறிஸ்துவண்டை நம்மை வழிநடத்துவதையும் உணர்ந்தோம். இன்று சிலுவையின் உபதேசத்தை அநேகருக்கு போதிக்கும் போதகராய் முகேஷ் ஊழியம் செய்கிறார்.
கடினமான இருதயங்களைக் கூட மாற்றும் ஆற்றல் இயேசுவுக்கு உண்டு. இன்று அவருடைய வல்லமையான தொடுதல் யாருக்கு தேவை?
நீங்கள் கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுகொள்ளுவதற்கு முன்பு சிலுவையின் செய்தியை எப்படிப் பார்த்தீர்கள்? உங்கள் சாட்சியைக் கேட்பதால் யார் பயனடையலாம்?
இயேசுவே, சிலுவையின் மூலமாய் நீர் என்னை உம்மண்டை சேர்த்துக்கொண்டதற்காய் நன்றி. நீர் இல்லாமல் நான் தொலைந்து போவேன்!