சார்லா இறந்து கொண்டிருந்தாள், அவளுக்கு அது தெரியும். அவள் மருத்துவமனை படுக்கையில் படுத்திருந்தபோது, அறுவை சிகிச்சை நிபுணரும் இளம் பயிற்சியாளர்களும் அறைக்குள் நுழைந்தனர். அடுத்த சில நிமிடங்களுக்கு, மருத்துவர் சார்லாவை கவனிப்பதை நிறுத்திவிட்டு, அங்கு இருந்த இளம் பயிற்சியாளர்களுக்கு அவளது முடிவு நிலையைப் பற்றி விவரித்துக்கொண்டிருந்தார். இறுதியாக, அவர் அவளை நோக்கி, “எப்படி இருக்கிறாய்?” என்று கேட்டார். சார்லா பலவீனமாகச் சிரித்து, இயேசுவின் மீதான நம்பிக்கையையும் அமைதியையும் பற்றி அந்த குழுவினரிடம் அன்புடன் பகிர்ந்துகொண்டார்.
ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, இயேசுவின் காயப்பட்ட, நிர்வாண சரீரமானது வழிப்போக்கர்களின் பார்வைக்கு முன்பாக தொங்கிக்கொண்டிருந்தது. அவரைத் துன்புறுத்துபவர்களை அவர் கடிந்துகொள்வாரா? இல்லை. மாறாக, ‘பிதாவே, இவர்களை மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே” என்றார் (லூக்கா 23:34). பொய்யாகக் குற்றம் சாட்டப்பட்டு சிலுவையில் அறையப்பட்டாலும், அவர் தமது சத்துருக்களுக்காக ஜெபித்தார். மேலும் அவரோடு கூட அவமானப்படுத்தப்பட்ட இன்னொரு கள்ளனிடம், அவனுடைய விசுவாசத்தினிமித்தம், “இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய்” (வச. 43) என்று வாக்களிக்கிறார். அவருடைய அவமானத்திலும் வேதனையிலும் கூட, மற்றவர்கள் மீதான அன்பினிமித்தம் அவர்களுக்கு நம்பிக்கையை அளிக்கும் வார்த்தைகளை இயேசு பேசினார்.
சார்லா அங்கேயிருந்த இளம் பயிற்சியாளர்களுக்கு ஆண்டவரைக் குறித்து சொல்லி முடித்தவுடன், டாக்டரின் கண்ணீர் ததும்பும் கண்களை பார்த்து, “நீங்கள் எப்படியிருக்கிறீர்கள்?” என்று மென்மையாக விசாரித்தாள். கிறிஸ்துவின் கிருபையினாலும் பெலத்தினாலும் ஜீவனுக்கேதுவான வார்த்தைகளை பகிர்ந்துகொண்டு, அவர்கள் மீதான தன்னுடைய அன்பை பிரதிபலித்தாள். இப்போதோ அல்லது வரவிருக்கிற நாட்களிலோ நாம் எதிர்கொள்ளும் எந்தவொரு கடினமான சூழ்நிலையிலும், ஜீவ வார்த்தைகளை அன்புடன் பேசுவதற்கு தேவன் நமக்கு தைரியத்தை கொடுப்பார் என்று நம்புவோம்.
இந்த நாட்களில் நீங்கள் என்ன கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்கிறீர்கள்? இந்த சவாலான பருவத்தில் ஜீவ வார்த்தைகளைப் பேசும்போது, இயேசுவையும் அவருடைய வல்லமையையும் நீங்கள் எப்படி சார்ந்துகொள்ள முடியும்?
இயேசுவே, உமது கிருபை மற்றும் பணிவின் மாதிரிக்காக நான் உம்மைத் துதிக்கிறேன். அன்பும் அக்கறையும் இல்லாதவர்களிடம் நான் பேசும்போதும், அந்த குணாதிசயங்களை நான் பிரதிபலிக்க எனக்கு உதவிசெய்யும்.