1742ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், இங்கிலாந்தின் ஸ்டாஃபோர்ட்ஷையரில், சார்லஸ் வெஸ்லி பிரசங்கித்த நற்செய்திக்கு எதிராக ஒரு கலவரம் வெடித்தது. சார்லஸ_ம் அவரது சகோதரரான ஜானும், பாரம்பரிய திருச்சபை வழக்கங்களை மாற்ற முயற்சித்ததினால், நகர வாசிகளுக்கு அது தவறாய் தெரிந்தது.

ஜான் வெஸ்லி கலவரத்தைப் பற்றி கேள்விப்பட்டதும், அவர் தனது சகோதரருக்கு உதவ ஸ்டாஃபோர்ட்ஷையருக்கு விரைந்தார். கட்டுக்கடங்காத கூட்டம் ஜான் தங்கியிருந்த இடத்தை சூழ்ந்தது. அக்கூட்டத்தின் தலைவர்களை ஜான் நேருக்கு நேர் சந்தித்தார். அவர்களுடன் பட்சமாய் பேசினார். அவர்கள் ஒவ்வொருவரின் கோபமும் தணிந்தது.

ஜான் வெஸ்லியின் சாந்தமான மற்றும் அமைதியான அணுகுமுறை ஒரு முரட்டுத்தனமான கும்பலை அமைதிப்படுத்தியது. ஆனால் அது இவருக்குள் இயல்பாய் ஏற்பட்ட சாந்தம் அல்ல; மாறாக, வெஸ்லி பின்பற்றிய இரட்சகரின் இருதயம் இது. இயேசு, “நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்” (மத்தேயு 11:29) என்கிறார். இந்த மென்மையான அணுகுமுறை “மிகுந்த மனத்தாழ்மையும் சாந்தமும் நீடிய பொறுமையும் உடையவர்களாய், அன்பினால் ஒருவரையொருவர் தாங்கி” (எபேசியர் 4:2)

இருங்கள் என்று பவுல் அப்போஸ்தலர் நமக்கு விடுத்த சவாலுக்குப் பின்னால் உள்ள மெய்யான சக்தியாக மாறுகிறது. அத்தகைய பொறுமை நமக்கு சாத்தியமற்றதாய் தெரிகிறது. ஆனால் நம்மில் இருக்கும் ஆவியின் கனிகளும், கிறிஸ்துவின் இருதயத்தின் மென்மையும் நம்மை வேறுபிரித்து, இந்த பகைமையான உலகத்தை மேற்கொள்ள நமக்கு உதவுகிறது. நாம் அவ்வாறு செய்யும்போது, “உங்கள் சாந்தகுணம் எல்லா மனுஷருக்கும் தெரிந்திருப்பதாக. கர்த்தர் சமீபமாயிருக்கிறார்” (பிலிப்பியர் 4:5) என்ற பவுலின் வார்த்தைகளை நிறைவேற்றுகிறோம்.