ஆயுஷ் தன்னுடைய காலை சிற்றுண்டியை அனுதினமும் அருகில் இருக்கும் கடையில் வாங்குவது வழக்கம். அதேபோன்று ஒவ்வொரு நாளும் தேவையிலிருப்பவர்களின் காலை சிற்றுண்டிக்கான தொகையையும் செலுத்தி, அவர்களை வாழ்த்துமாறு கேஷியரிடம் சொல்லுவதும் வாடிக்கை. அந்த உதவியை பெறுபவர்களுக்கும் ஆயுஷ_க்கும் நேரடியான தொடர்பு ஏதும் இல்லை. உதவியைப் பெற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதையும் அவர் பார்ப்பதில்லை. இதை அவரால் செய்ய முடிந்த சிறிய உதவி என்று அவர் நம்புகிறார். இருப்பினும் தன்னுடைய உள்ளுர் பத்திரிக்கை ஆசிரியருக்கு வந்த முகவரியில்லாத ஒரு கடிதத்தை படித்தபோது, அவருடைய செய்கையின் தாக்கத்தை அவர் அறிந்துகொண்டார். தன்னுடைய வாழ்க்கையை மாய்த்துக்கொள்ள எண்ணிய ஒரு நபரின் தீர்மானத்தை அவருடைய அந்த சிறிய உதவி எப்படி மாற்றியது என்பதை அவர் கண்டறிந்தார்.
ஆயுஷ் எந்த ஒரு பலனையும் எதிர்பார்க்காமல் யாரோ ஒருவருக்கு காலை உணவை பரிசளிக்கிறார். அதின் பாதிப்பையும் அவர் பார்க்க நேர்ந்தது. இயேசு, “உன் வலதுகை செய்கிறதை உன் இடதுகை அறியாதிருக்கக்கடவது” (மத்தேயு 6:3) என்று சொல்லுகிறார். ஆயுஷ் செய்தது போல, அங்கீகாரத்தை எதிர்பார்க்காமல் உதவிசெய்யுமாறு அவர் நம்மை உற்சாகப்படுத்துகிறார்.
மற்றவர்களின் பாராட்டுகளை எதிர்பார்க்காமல், தேவன் மீதுள்ள அன்பினால் நாம் செய்யும் சிறியதோ அல்லது பெரிய உதவியோ, அதைப் பெறுபவர்களுக்கு நிச்சயமாய் அது உதவும் என்று நாம் உறுதியாக நம்பலாம்.
முகமறியாத ஒருவரின் உதவியினால் நீங்கள் எவ்விதம் பயனடைந்தீர்கள்? நீங்கள் இரகசியமாக எப்படி உதவிசெய்யப் போகிறீர்கள்?
பிதாவே, மற்றவர்களின் தேவைகளைப் பூர்த்திசெய்ய என்னைப் பயன்படுத்தியதற்கும், அவர்கள் மூலம் என் தேவைகளைப் பூர்த்தி செய்ததற்கும் நன்றி. எனக்கான புகழைத் தேடாமல் உம்முடைய நாம மகிமைக்காய் கொடுத்து உதவ எனக்கு உதவிசெய்யும்.