2021ஆம் ஆண்டின் வசந்தகாலத்தில் டெக்ஸாஸில், சூழல்காற்றின் அருகே தோன்றிய வானவில்லின் காணொலிகளையும், புகைப்படங்களையும் ஆர்வலர்கள் பதிவுசெய்திருந்தனர். அதில் ஒரு காணொலியில், நீண்ட கோதுமை கதிரின் தண்டுகள் காற்றின் வீரியத்தால் வளைந்திருந்தன, கருவானத்தை துண்டாடிய வானவில், சுழல்காற்றுக்கு முன் கெம்பிரமாய் நின்றது. இன்னொரு காணொலியில், பாதசாரிகள் சாலையின் ஓரத்தில் நின்றுகொண்டு புனல் வடிவ மேகத்தின் அருகே இருந்த அந்த நம்பிக்கையின் சின்னத்தை பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
சங்கீதம் 107இல் சங்கீதக்காரன், கடினமான தருணங்களில் தேவனிடத்திற்கு திரும்பும்படிக்கு நமக்கு நம்பிக்கைக் கொடுத்து உற்சாகப்படுத்துகிறார். அந்த புயலின் நடுவில் இருப்பவர்களின் “ஞானமெல்லாம் முழுகிப்போகிறது” (வச. 27) என்று விவரிக்கிறார். “அப்பொழுது தங்கள் ஆபத்திலே அவர்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிறார்கள், அவர்கள் இக்கட்டுகளுக்கு அவர்களை நீங்கலாக்கி விடுவிக்கிறார்” (வச. 28).
வாழ்க்கையில் புயல் போன்ற சூழ்நிலைகள் ஏற்படும்போது நம்பிக்கையோடு செயல்படுவதற்கு தேவனுடைய பிள்ளைகள் தடுமாறுவார்கள் என்பதை தேவன் அறிவார். நம்முடைய பாதை இருளாயிருக்கும்போது, அவருடைய நன்மைகளை நினைவுகூருதல் அவசியம்.
உணர்வு ரீதியான புயலோ, மன ரீதியான பாதிப்பை ஏற்படுத்த கூடிய ஒன்றோ நம் வாழ்வை கலங்கடிக்கும்போது, தேவன் அதையே அமர்ந்த மெல்லிய சத்தமாய் மாற்றி நம்மை பாதுகாப்பாய் வழிநடத்துவார் (வச. 29-30). நாம் எதிர்பார்த்த நேரத்தில் நமக்கு நன்மை கிட்டவில்லையென்றாலும், அவர் கொடுத்த வாக்குத்தத்தங்களில் அவர் உண்மையுள்ளவர் என்று அவரையே நம்புவோம். எப்பேர்ப்பட்ட புயலையும் தகர்க்க அவர் என்றென்றும் நம்பத்தக்கவரே.
உங்கள் வாழ்வில் புயல் போன்ற சூழ்நிலைகளில் நீங்கள் எப்போது நம்பிக்கைகொள்ள தடுமாறினீர்கள்? உங்களுக்கு நம்பிக்கை தேவைப்பட்டபோது வேதத்திலுள்ள வாக்குத்தத்தங்களையும், நபர்களையும் தேவன் உங்களுக்கு எவ்வாறு நினைவுபடுத்தினார்?
அன்பான தேவனே, என் வாழ்வில் என்ன நடந்தாலும், எனக்கு நம்பிக்கையூட்டுபவராய் நீர் இருப்பதால் உமக்கு நன்றி.