அநேக ஆவிக்குரிய கூட்டங்களுக்கு தலைமையேற்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது. தனிமையான இடத்தில் ஜெபித்தும், என் ஜீவியத்தை சுயபரிசோதனை செய்வதும் ஆழமாய் எனக்குதவியது. நிகழ்ச்சியின்போது, பங்கேற்பாளர்களிடம் சிலசமயம் ஒரு சுயபரிசோதனை ஆய்வு நடத்துவதுண்டு. அதாவது, “நீங்கள் மரித்துவிட்டீர்கள், உங்கள் கண்ணீர் அஞ்சலி விளம்பரம் பத்திரிக்கையில் பிரசுரமாகிவிட்டது என்று கற்பனை செய்துகொள்ளுங்கள். அவ்விளம்பரம் எவ்வாறிருக்க விரும்புவீர்கள்?” என்று கேட்பதுண்டு. அதின் பலனாக சிலர் தங்கள் வாழ்வை சிறப்பாய் முடிக்கும்பொருட்டு, வாழ்வின் முன்னுரிமைகளை மாற்றிக்கொண்டதுமுண்டு.
2 தீமோத்தேயு 4ஆம் அதிகாரம் அப்போஸ்தலன் பவுல் இறுதியாக எழுதிய வார்த்தைகளை பதிவுசெய்துள்ளது. பவுல் அறுபதைத்தான் கடந்திருந்தார், இதற்கு முன்னமே மரணத்தை சந்தித்திருந்தார். இருப்பினும், இப்போது தாம் மரணத்தை நெருங்குவதை அவர் உணருகிறார் (2 தீமோத்தேயு 4:6). இனி மிஷனரி பயணம் கிடையாது, திருச்சபைகளுக்கு நிருபம் எழுதப்போவதும் கிடையாது. அவர் தன் வாழ்க்கையை திரும்பிப் பார்த்து, “நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்” (வச.7) என்கிறார். அவர் குறைவுள்ளவராயிருப்பினும் (1 தீமோத்தேயு 1:15-16), எந்தளவிற்கு தேவனுக்கும், சுவிசேஷத்திற்கும் தான் உண்மையாய் வாழ்ந்துள்ளார் என்பதை நினைவுகூருகிறார். பின்னர், சீக்கிரமே அவர் இரத்தசாட்சியாய் மரித்ததாக பாரம்பரியம் கூறுகிறது.
நம் இறுதி நாட்களைக் குறித்து சிந்திப்பது, நம்முடைய தற்போதைய வாழ்விற்கு தெளிவை உண்டாக்கும் ஒரு வழி. பவுலின் வார்த்தைகள் பின்பற்றுவதற்கு ஏற்ற நல்ல ஒரு மாதிரி. நல்ல போராட்டத்தைப் போராடுங்கள். ஓட்டத்தை முடியுங்கள். விசுவாசத்தைக் காத்துக்கொள்ளுங்கள். ஏனென்றால், நம் ஜீவியத் தேவைக்காகவும், ஆவிக்குரிய போராட்டங்களை மேற்கொள்ளவும், ஓட்டத்தை நேர்த்தியாய் முடிக்கவும், கர்த்தரை சார்ந்துகொண்டு அவருடைய வழிகளில் உறுதியாய் நின்றிருக்கிறோமா என்பதே கடைசியில் பொருட்படுத்தப்படும்.
உங்களுடைய வாழ்க்கை முடிந்துவிட்டது, உங்களுடைய கண்ணீர் அஞ்சலி பதிவு பிரசுரிக்கப்பட்டுவிட்டது என்பதை கற்பனை செய்யுங்கள். அவ்விளம்பரம் எவ்வாறிருக்க விரும்புவீர்கள்? உங்கள் ஓட்டத்தை நேர்த்தியாய் நிறைவுசெய்வதற்கு என்ன மாற்றங்களை நீங்கள் ஏற்படுத்தப்போகிறீர்கள்?
பிதாவாகிய தேவனே, கடைசிவரை உமக்கு உண்மையுள்ளவனாய் வாழ எனக்கு உதவிசெய்யும்.