“இல்லை, நான் செய்யவில்லை.” ஜேன் தன் பதின்பருவ மகனின் வார்த்தைகளைக் கேட்டாள். அவன் உண்மை சொல்லவில்லை என்றறிவாள். மீண்டும் என்ன நடந்ததென்று சைமனிடம் கேட்குமுன், அவள் ஒரு நிமிடம் ஜெபித்தாள். அவன் தொடர்ந்து தன் தவறை மறுத்தான். கோபத்தில், தன் கைகளை வெடுக்கென உதறி, “எனக்கு கொஞ்சம் அவகாசம் தேவை” என்றெழுந்து வெளியே நடந்தாள். அவள் தோள் மீது ஒரு கரம் வைக்கப்படுவதையும், சைமன் மன்னிப்பு கேட்பதையும் உணர்ந்தாள். சைமன், பரிசுத்த ஆவியானவரின் உணர்த்துதலுக்கு தன்னை ஒப்புக்கொடுத்து, தன் தவறையுணர்ந்து மனந்திரும்பினான்.
பழைய ஏற்பாட்டு புத்தகமான யோவேலில், ஜனங்கள் தங்கள் பாவங்களிலிருந்து உண்மையாக மனந்திரும்பி, “முழு இருதயத்தோடும் என்னிடத்தில் திரும்புங்கள்” (2:12) என்று தேவன் அவர்களை அழைத்தார். தேவன் வெளித்தோற்றமான குற்றவுணர்ச்சியை விரும்புகிறவரல்ல; மாறாக, அவர்களின் கடினமான மனப்போக்கை விட்டுவிட்டு, “நீங்கள் உங்கள் வஸ்திரங்களையல்ல, உங்கள் இருதயங்களைக் கிழித்து” தன்னிடம் திரும்பும்படிக்கு அறிவுறுத்துகிறார். மேலும் தேவன் “இரக்கமும், மன உருக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்; அவர் தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவருமாயிருக்கிறார்” (வச. 13) என்று யோவேல் இஸ்ரவேலர்களுக்கு நினைப்பூட்டுகிறார்.
நம் தவறுகளை அறிக்கையிடுவது கடினமான காரியம். பெருமையினால் நம் பாவங்களை நாம் ஒப்புக்கொள்வதில்லை. உண்மையை மறைத்து, ‘இது சகஜம்’ என்று நம் செயலை நியாயப்படுத்த முயற்சிப்போம். தேவனின் மிருதுவான ஆனால் அழுத்தமான உணர்த்துதலுக்கு செவிகொடுத்து உடனே நாம் மனந்திரும்பினால், அவர் நம்மை மன்னித்து, நமது பாவங்களற நம்மைக் கழுவி தூய்மையாக்குவார் (1 யோவான் 1:9). நம் பாவ மன்னிப்பின் நிச்சயத்தை அறிந்து குற்றமனசாட்சிக்கும், நிந்தைக்கும் நீங்கலாகி வாழலாம்.