அந்த தீவிர சுகாதார மருத்துவமனையில் அதிகாலை 3 மணி. ஒரு மணிநேரத்திற்குள்ளாகவே நாலாவது முறையாக அந்த கவலையுற்ற நோயாளி அழைப்பு மணியை அழுத்துகிறார். சற்றும் சலிப்பின்றி அந்த இரவுப்பணி செவிலியர் பதிலளிக்கிறார். உடனே மற்றொரு நோயாளி பராமரிப்பிற்காக அலறுகிறார். இதுவும் அச்செவிலியரை ஆச்சரியப்படுத்தவில்லை. ஐந்து வருடங்களுக்கு முன், தன் மருத்துவமனையின் பகல்நேர பரபரப்பை தவிர்க்கவே இரவுப்பணியை கேட்டுப்பெற்றாள். அப்பொழுது தான் உண்மை உரைத்தது. இரவுப்பணியில் எப்போதுமே நோயாளிகளை தனியாக தூக்குதல், நகர்த்துதல் போன்ற கூடுதல் பணிகளிருந்தன. மேலும் நோயாளிகளின் நிலையை கூர்ந்து கவனித்து, அவசர நேரங்களில் தக்க மருத்துவரை அழைக்கவும் வேண்டியிருந்தது.
சக இரவுப்பணியாளர்களின் நெருங்கிய நட்பு ஆறுதலாயிருப்பினும், இந்த செவிலியர் போதுமான தூக்கமின்றி அவதிப்படுகிறார். தன் பணி மிக முக்கியமானது என்று கண்டு, தனக்காக ஜெபிக்குமாறு தன் சபையாரை அடிக்கடி கேட்பார். தேவனுக்கே மகிமை! அவர்கள் ஜெபங்கள் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
அவர் இப்படி துதிப்பது ஒரு இரவுப்பணியாளருக்கு நல்லது. நமக்கும் அது நல்லதே. சங்கீதக்காரன், “இதோ, இராக்காலங்களில் கர்த்தருடைய ஆலயத்தில் நிற்கும் கர்த்தரின் ஊழியக்காரரே, நீங்களெல்லாரும் கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள். உங்கள் கைகளைப் பரிசுத்த ஸ்தலத்திற்கு நேராக எடுத்து, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்” (சங்கீதம் 134:1–2) என்றெழுதுகிறார்.
இந்த சங்கீதம், ஆலய காவலாளர்களாய் இரவும் பகலும் தேவனுடைய ஆலயத்தை பாதுகாக்கும் லேவியர்களின் முக்கியப்பணியை பாராட்டி எழுதப்பட்டுள்ளது. இந்த பரபரப்பான உலகில், இந்த சங்கீதத்தை குறிப்பாக இரவுப்பணியாளர்களுக்கு பகிர்வது ஏற்றதாயிருக்கும், எனினும் நாம் அனைவரும் தேவனை இரவிலும் துதிக்கலாம். சங்கீதக்காரன், “வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தர் சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பாராக” (வச. 3) என்று ஆறதல்படுத்துகிறார்.
செவிலியர்கள், காவலாளர்கள், தீயணைப்பு வீரர்கள் போன்ற இரவுப்பணியாளர்களை நீங்கள் நினைக்கையில், அவர்களுக்கென தேவனிடத்தில் எத்தகைய ஜெபங்களை ஏறெடுப்பீர்கள்? தேவனை துதிப்பது இரவுப் பணியாளர்களுக்கு ஆசீர்வாதத்தை கொண்டுவருவதாய் உள்ளது. ஏன்?
அன்பு தேவனே, அதிகாலையில் பாதுகாப்பாக நான் தூங்குகையில், என் சமுதாயத்தில் முக்கிய பணியாற்றிக்கொண்டிருக்கும் இரவுப்பணியாளர்களை ஆசீர்வதியும். இரவிலும் உம்மைத் துதிக்க எனக்கு உதவும்.