என் தோழியின் சக விசுவாசியும் உடன் பணியாளருமாகிய ஒருவர் அவளிடம், நீங்கள் எந்த அரசியல் கட்சியைச் சேர்ந்தவர் என்று குறிப்பாகக் கேட்டதை நினைவுகூர்ந்தார். அவர்களின் சமூகத்தை பிரிக்கும் எவ்வளவு காரியங்களில் இருவரும் ஒத்துப்போகிறார்கள் என்று தெரிந்துகொள்ளவே அவர் அவ்வாறு கேட்டார். அக்கேள்விக்கு பதிலளிப்பதற்கு பதிலாக, இருவருக்குள்ளும் இருக்கும் ஒற்றுமையை முக்கியத்துவப்படுத்தும் முயற்சியில் “நாம் இருவருமே விசுவாசிகளாதலால், கிறிஸ்துவுக்குள் இருக்கும் நம் ஒற்றுமையையே நான் அதிக முக்கியத்துவப்படுத்துகிறேன்” என பதிலளித்தாளாம்.
பவுலின் காலத்திலும், ஜனங்கள் பல்வேறு பிரச்சனைகளுக்காய் பிரிந்திருந்தனர். எத்தகைய உணவுகளை சாப்பிடலாம்? எந்த நாட்கள் விசேஷித்தவைகள்? போன்ற காரியங்களில் ரோமாபுரியில் இருந்த கிறிஸ்தவர்களுக்குள் பல கருத்துவேறுபாடுகள் இருந்தன. தங்களுடைய கருத்துக்களில் அவரவர் மனதிலே முழு நிச்சயத்தை உடையவர்களாய் இருந்தாலும், பவுல் அவர்கள் அனைவருக்கும் பொதுவான ஒன்றை நினைவூட்டுகிறார். இயேசுவுக்கென வாழ்வதே அந்த தீர்மானம் (ரோமர் 14:5–9). ஒருவரையொருவர் குறை சொல்லுவதை விட்டுவிட்டு, “சமாதானத்துக்கடுத்தவைகளையும், அந்நியோந்நிய பக்திவிருத்தி உண்டாக்கத்தக்கவைகளையும்” (வச. 19) நாடுமாறு அவர்களை ஊக்குவிக்கிறார்.
சிறிய மற்றும் பெரிய காரியங்களைக் குறித்து தேசங்களும், சபைகளும், சமூகங்களும் பிரிந்துகிடக்கும் இந்த காலகட்டத்தில், நம்மை ஒன்றாக்கும் கிறிஸ்துவின் சிலுவை முயற்சிக்கு நேரே நாம் ஒருவரையொருவர் திருப்பி, அவருடனான நித்திய வாழ்க்கையை பத்திரப்படுத்தலாம். நம்முடைய தனிப்பட்ட கருத்துக்களையே பிடித்துக்கொண்டு, “தேவனுடைய கிரியையை அழித்துப்போடாதே” (வச. 20) என்று 2௦௦௦ ஆண்டுகளுக்கு முன்னான பவுலின் எச்சரிக்கை, அக்காலத்தை போலவே இக்காலத்திற்கும் பொருந்தும். ஒருவரையொருவர் நியாயந்தீர்ப்பதை விட்டுவிட்டு, அன்பில் அனைத்தையும் செய்து, நம் சகோதர சகோதரிகளை கௌரவிக்கும் வகையில் வாழ்வோம்.
உங்களுக்கும் மற்ற விசுவாசிக்கும் எப்போது கருத்து வேறுபாட்டால் பிரிவினை உண்டானது? உங்கள் கருத்துவேறுபாடுகளை நீங்கள் களைந்தவரென்றால், எவ்வாறு அப்படி செய்தீர்கள்?
இயேசுவே, என்னை மீட்டுக்கொண்டதற்காக நன்றி. அற்ப காரியங்களுக்கு கூட திசைமாறியவனாக, எனக்கும் மற்ற விசுவாசிகளுக்குமிடையே பிரிவினை ஏற்பட நான் அனுமதித்த தருணங்களை எனக்கு மன்னியும். உம்மையே கவனித்து நோக்கி, ஒற்றுமை உண்டாக்க எனக்கு உதவும்.