ஈஸ்டர் ஞாயிறு முடிந்து அடுத்தவாரம் என்பதால், எங்கள் ஐந்து வயது மகன் அநேக உயிர்த்தெழுதல் செய்திகளைக் கேட்டிருந்தான். அவன் பொதுவாக அநேக கேள்விகளைக் கேட்பான். அவற்றுள் பெரும்பாலும் எங்களை திக்குமுக்காடச் செய்யும். நான் வாகனம் ஒட்டிக்கொண்டிருக்க, அவன் பயணியர் இருக்கையில் சீட் பெல்ட் அணிந்து அமர்ந்திருந்தான். வெளியே வேடிக்கை பார்த்தவாறே, ஏதோ ஆழமான சிந்தையிலிருந்தான். “அப்பா” என்றழைத்தவன் சற்று நிறுத்தி, கடினமானதைக் கேட்கும் ஆயத்தத்தோடே, “இயேசு நம்மை மறுபடியும் உயிரோடெழுப்புகையில், நாம் உண்மையாகவே உயிரோடிருப்போமா? அல்லது அது நம்முடைய கற்பனைதானா?” என்று கேட்டான்.
இதைப்பற்றி தாராளமாக பேச நமக்கு துணிச்சல் இல்லையென்றாலும், நம்மில் அநேகருக்கு இதே கேள்வியுண்டு. உண்மையாகவே தேவன் நம்மை குணப்படுத்தப் போகிறாரா? உண்மையாகவே அவர் நம்மை மரித்தோரிலிருந்து உயிரோடெழுப்புவாரா? தம்முடைய வாக்குத்தத்தங்களை உண்மையாகவே நிறைவேற்றுவாரா?
“புதிய வானம், புதிய பூமி” (வெளி 21:1), என்று அப்போஸ்தலர் யோவான் நம் எதிர்காலத்தை வர்ணிக்கிறார். அந்த பரிசுத்த நகரத்தில், “தேவன்தாமே நம்மோடேகூட இருந்து நம்முடைய தேவனாயிருப்பார்” (வச. 3). கிறிஸ்து ஜெயித்ததினால், நமக்கு கண்ணீரற்ற எதிர்காலம் வாக்குப்பண்ணப்பட்டுள்ளது. தேவனுக்கும் அவர் ஜனத்திற்கும் எதிராக எந்த தீமையும் ஆளுகை செய்யப்போவதில்லை. இச்சிறந்த எதிர்காலத்தில்தான், “மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின” (வச. 4) என்று வாக்குப்பண்ணப்பட்டுள்ளது.
அதாவது, தேவன் நமக்கு வாக்குப்பண்ணும் எதிர்காலத்தில், நாம் மெய்யாகவே ஜீவனோடிருப்போம். இப்போது நாம் வாழும் வாழ்வு வெறும் நிழலே என்று சொல்லுமளவிற்கு நாம் மெய்யான வாழ்வை அனுபவிப்போம்.
உங்கள் வாழ்வில் எது மரித்துப்போனதாய் உள்ளது? மரணம் அழியுமென்றும் நாம் நிஜமாகவே வாழப்போகிறோம் என்று தேவன் வாக்களித்திருக்க, இது உங்கள் நம்பிக்கையை எவ்வாறு புதுப்பிக்கிறது?
தேவனே, மரணம் அதின் முடிவை சந்திக்குமென்று நீர் சொல்லி, எனக்கு மெய்யான வாழ்வை வாக்குப்பண்ணினதற்காய் உமக்கு நன்றி.