எலி விஸேல் என்பவரின் “இரவு” என்ற நாவல், இனப்படுகொலையின் பயங்கரங்களால் நம்மை அச்சுறுத்துகிறது. நாசிப்படைகளின் மரண முகாம்களில் ஏற்பட்ட சொந்த அனுபவங்களை தழுவின இந்நாவலில், வேதாகமத்தின் யாத்திராகம புத்தகத்தின் சம்பவங்களை விஸேல் நேர்மாறாக ஒப்பிட்டுள்ளார். மோசேயும், இஸ்ரவேலர்களும் முதல் பஸ்காவிற்கு பின் அடிமைத்தனத்திலிருந்து தப்பினர் (யாத்திராகமம் 12). ஆனால் இங்கே பஸ்காவிற்கு பின்னர் நாசிகள் யூத தலைவர்களை கைது செய்தனர் என்று விஸேல் கூறுகிறார்.
விஸேலின் முரண்பாட்டை நாம் விமர்சிக்கும் முன், வேதாகமத்தின் அதேபோன்ற திருப்பம் நிறைந்த சம்பவம் ஒன்றுள்ளது. பஸ்காவின் இரவில், தேவ ஜனங்கள் தம் துன்பங்களிலிருந்து விடுவிக்க எதிர்பார்க்கப்பட்ட இயேசு, அவர்களின் எதிர்பார்ப்பிற்கு மாறாக, தன்னை கொல்லக்கூடியவர்கள் தம்மை கைதுசெய்ய அனுமதிக்கிறார்.
இயேசு கைதாவதற்கு முன்னான புனித சம்பவத்திற்கு யோவான் நம்மை அழைத்துச் செல்கிறார். தனக்கு முன்பாக இருந்ததைக் குறித்து “ஆவியில் கலங்கினவராக,” அக்கடைசி இரவு போஜனத்தில் தாம் காட்டிக்கொடுக்கப்படப் போகிறதை இயேசு முன்னறிவித்தார் (யோவான் 13:21). பின்னர், நம்மால் புரிந்துகொள்ளவே முடியாத செயலாக, தன்னை காட்டிக்கொடுக்க போகிறவனுக்கே அப்பத்தை பரிமாறினார். “அவன் அந்தத் துணிக்கையை வாங்கினவுடனே புறப்பட்டுப்போனான்; அப்பொழுது இராக்காலமாயிருந்தது” (வச. 30) என்று அச்சம்பவம் சொல்கிறது. சரித்திரத்தின் மாபெரும் அநீதி ஆரம்பமானது, இருந்தபோதிலும் இயேசு, “இப்பொழுது மனுஷகுமாரன் மகிமைப்படுகிறார், தேவனும் அவரில் மகிமைப்படுகிறார்” (வச. 31) என அறிவித்தார். சில மணிநேரங்களில், சீஷர்கள் பீதியுற்று, தோல்வியையும், நிராகரிப்பையும் அனுபவிக்கப் போகிறார்கள். ஆனால் இயேசுவோ தேவத் திட்டம் அப்படியே செயல்படுவதைப் பார்க்கிறார்.
அந்தகாரம் சூழ்வதைப்போல தோன்றினாலும், தேவன் தம் இருண்ட இரவை எதிர்கொண்டு வெற்றிபெற்றதை நாம் நினைவுகூரலாம். அவர் நம்மோடு வருகிறார். இரவு நீளாது.
நீங்கள் பீதியடைந்து, நம்பிக்கையற்றவர்களாக, விரக்தியை அனுபவித்துள்ளீர்களா? அந்த இருண்ட அனுபவத்தை கடந்தபின் எப்படி உணர்ந்தீர்கள் என்று எவ்வாறு விவரிப்பீர்கள்?
இயேசுவே, நீர் சிலுவைக்கு நேரான படிகளில் நடந்தபோதும் உம் பிதாவின் திட்டத்தையே கண்ணோக்கியதற்காய் உமக்கு நன்றி. எங்களுக்காக மரணத்தை நீர் வென்றதற்காக உமக்கு நன்றி.