நார்த் கரோலினா பல்கலைக்கழகத்தின் நூலக காப்பகத்தில் உள்ள ஒரு நின்றுபோன கடிகார முட்கள் திகிலான ஒரு கதையை சொல்கின்றன. அவை சரியாக 8:19 மற்றும் 56 வினாடிகள் நேரத்தைக் காட்டும், அதுவே அக்கடிகாரத்தின் சொந்தக்காரரான எலிசா மிச்சேல் என்பவர், அபலாசியன் மலைப்பகுதிகளில் உள்ள நீர்வீழ்ச்சியில் ஜூன் 27, 1857 அன்று காலை சறுக்கிவிழுந்து மரித்த சரியான நேரம்.
தற்பொழுது அவர் பெயரிலேயே மவுண்ட் மிச்சேல் என்றழைக்கப்படும் அந்த சிகரத்தில், அச்சிகரமே மிசிசிபியின் கிழக்கில் உள்ள உயரமான சிகரம் என்ற தன் கூற்றை நிரூபிக்க சில ஆதாரங்களை அப்பொழுது பல்கலைக்கழக பேராசிரியர் மிச்சேல் திரட்டிக்கொண்டிருந்தார் (அவர் கூற்று சரியே). அவர் விழுந்த இடத்தின் அருகேயேயிருந்த மலை உச்சியில் தான் அவர் கல்லறையும் உள்ளது.
சமீபத்தில், நான் அந்த மலையுச்சியில் ஏறினபோது தான் என் அழிவுத்தன்மையையும், மிச்சேலையும் ஒப்பிட்டு, எங்கள் இருவருக்கும் எவ்வளவு குறுகிய காலமே உள்ளது என்றுணர்ந்தேன். மேலும் இயேசு தன் வருகையை குறித்து தன் சீஷர்களிடம் ஒலிவ மலையில் கூறிய வார்த்தைகள் “நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார். ஆதலால், நீங்களும் ஆயத்தமாயிருங்கள்” (மத்தேயு 24:44) என்று கூறியதை சிந்தித்தேன்.
அவர் வந்து தம் நித்திய ராஜ்யத்தை ஸ்தாபிக்கும் நாளையோ அல்லது நம்மை இவ்வுலகிலிருந்து தம்மிடமாய் அழைக்கப்போகும் காலமோ நம்மில் யாருக்கும் தெரியாது என்பதை இயேசு தெளிவாகக் குறிப்பிடுகிறார். ஆனால் ஆயத்தமாயிருக்கவும், விழித்திருக்கவும் (வச. 42) அவர் நமக்கு ஆலோசனை சொல்லுகிறார்.
டிக், டிக் என கடிகார முள்ளைப் போல நம் வாழ்க்கை வேகமாய் ஓடுகிறது. ஆனால் எவ்வளவு காலம்? நம் வாழ்வின் நொடிகளை நம் இரக்கமுள்ள இரட்சகரின் அன்பில் கழித்து, அவருக்காக பணியாற்றிக் காத்திருப்போமாக.
இயேசுவை சந்திக்க நீங்கள் எவ்வாறு ஆயத்தப்படுகிறீர்கள்? அவரோடு இருப்பதை பற்றி உங்களுக்கு பேராவலை தூண்டுவது எது?
அன்பு இரட்சகரே, உம்மை சந்திக்க எப்போதும் ஆயத்தமாயிருக்க எனக்கு உதவும். இன்று உம்மை சேவிக்கவும், உம் வருகைக்கு ஆயத்தப்படவும் எனக்கு உதவும்.