என்னுடைய பணியிடத்தில் ஏற்பட்ட சூழ்ச்சிகளை, பல மாதங்களாய் என்னால் சமாளிக்க முடிந்தது. கவலைப்படுவது என்பது எனக்கு இரண்டாம் பட்சம். நான் ஆச்சரியப்படும் வகையில் சமாதானமாய் உணர்ந்தேன். கவலைப்படுவதற்கு மாறாக, என்னுடைய எண்ணமும், மனமும் அமைதலாக இருந்தது. இந்த சமாதானம் தேவனிடத்திலிருந்தே வந்திருக்கும் என்பதை நான் அறிவேன். 

அதற்கு முற்றிலும் முரணாய், என்னுடைய வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் எல்லாம் நன்றாக நடந்துகொண்டிருந்த போதும் என் இருதயம் மிகவும் அமைதலற்று இருந்தது. நான் தேவனையும், அவர் நடத்துதலையும் நம்புவதை விட்டுவிட்டு, என் சுயதிறமையின் மீது நம்பிக்கை வைத்ததே அதற்கான காரணம் என்பதையும் நான் அறிவேன். என் வாழ்க்கையை திரும்பிப் பார்த்து, மெய்யான தேவசமாதானம் என்பது சூழ்நிலைகள் தீர்மானிப்பது அல்ல; மாறாக, அது தேவனை நம்புவதாலே உண்டாகும் என உணர்ந்தேன்.

நம் சிந்தை உறுதியாயிருக்கையில், தேவசமாதானம் நமக்கு கிடைக்கும் (ஏசாயா 26:3). ‘உறுதி’ என்ற எபிரெய வார்த்தையின் அர்த்தம், “சாய்ந்து கொள்வது” என்பதாகும். நாம் அவர்மீது சாய்ந்து கொள்ளும்போது, அவருடைய மெய்யான இளைப்பாறுதலை நாம் அனுபவிக்கலாம். அவர் அகந்தையுள்ளவர்களையும் துன்மார்க்கரையும் தாழ்த்தி, அவரை நேசிக்கிறவர்களின் வழிகளை செம்மையாக்குகிறவர் என்பதை நினைவுகூர்ந்து தேவனை நாம் நம்பலாம் (வச. 5-7). 

என் கடினமான வேளைகளில் நான் சமாதானத்தை அனுபவிக்கையில், தேவசமாதானம் என்பது துன்பங்களே இல்லாத நிலை அல்ல என்றும், துன்பங்களின் நடுவிலும் நம்மை மிக பாதுகாப்பாய் உணரச்செய்வதே தேவசமாதானம் என்பதை நான் கண்டுபிடித்தேன். மிகவும் கடினமான வாழ்க்கைச் சூழல்களிலும் நம் அறிவையும், புரிதலையும் கடந்து நம் இருதயத்தை இந்த தேவசமாதானம் ஆளுகைச் செய்கிறது (பிலிப்பியர் 4:6-7).