“இங்கிலாந்தின் பாதுகாவலர்” என்றழைக்கப்பட்ட ஆலிவர் க்ரோம்வெல், பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு படைத்தளபதி. அந்நாட்களில், இதுபோன்ற முக்கிய நபர்கள் தங்கள் உருவப்படங்களை வரைந்துக்கொள்வது வழக்கம். அதுபோல க்ரோம்வெல்லின் உருவப்படத்தை வரைந்த ஓவியர், அவரின் முகப்பொலிவை குறைக்கும் குறைகளை தவிர்த்துவிட்டு, அவரை அழகாய் வரைந்தார். அவரைப் பிரியப்படுத்தும் ஓவியரின் அச்செயலை அவர் விரும்பவில்லை.  அவர் அந்த ஓவியரைப் பார்த்து, “என் முகத்தில் இருக்கும் மருக்கள் மற்றும் அனைத்தோடும் என் முகத்தை வரையுங்கள், இல்லையேல் உங்களுக்கு நான் கூலி தரமாட்டேன்” என்று எச்சரித்தாராம். 

அந்த ஓவியரும் அதின்படியே வரைந்தாராம். எனவே வரைந்து முடிக்கப்பட்ட கிராம்வெல்லின் உருவப்படத்தில் சில முகப்பருக்கள் அப்பட்டமாக இருக்கும். ஆனால் இன்று சமூக வலைதளங்களில் பதிவிடப்படும் புகைப்படங்களில், முகப்பருக்கள் நீக்கப்பட்டும், மறைக்கப்பட்டும் பின்னரே பிரசுரிக்கப்படுகிறது.

 “மருக்கள் மற்றும் எல்லாம்” என்ற பதம், இன்று மக்கள் தங்களை, தங்கள் தப்பிதங்கள், குறைகள், சிந்தனை என்று அனைத்தையும் உள்ளது-உள்ளது போலவே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்த பரவலாய் பயன்படுத்தப்படுகிறது. அது சிலவேளைகளில் மிகவும் கடினம். ஆனால் நாம் நம் உள்ளான மனிதனை கூர்ந்து கவனிக்கும்போது நம் குணாதிசயங்களில் இருக்கும் சில தவறான காரியங்களைக் கண்டுபிடிக்கக்கூடும். 

தேவன் நம்முடைய ‘மருக்களை’ மன்னிக்கிறவராயிருக்கிறார். கொலோசெயர் 3ஆம் அதிகாரத்தில் மற்றவர்களை மன்னிப்பதற்கு நாம் போதிக்கப்படுகிறோம். நேசிக்கமுடியாத, கடினமான மக்களிடத்தில் கூட பொறுமையாகவும், தயவாகவும், இரக்கத்துடனும் செயல்படும்படிக்கு அப்போஸ்தலன் பவுல் நமக்கு அறிவுறுத்துகிறார். தேவன் நம்மை மன்னிப்பது போல நாமும் மற்றவர்களை மன்னிக்கும்படியான இருதயம் உடையவரகளாய் இருக்க நம்மை உற்சாகப்படுத்துகிறார் (வச.12-13). கிறிஸ்துவின் உதாரணத்தை முன்வைத்து, தேவன் நம்மை நேசித்தது போல மற்றவர்களை அவர்களின் ‘மருக்கள் மற்றும் எல்லாவற்றோடும்’ நேசிக்க நாம் போதிக்கப்படுகிறோம்.