அது ஒரு சனிக்கிழமை மாலைநேரம். அமைதியான ஆற்றங்கரை பூங்கா. உடற்பயிற்சி செய்ய ஓடுகிறார்கள்; மீன்பிடிக்கும் தூண்டில்கள் மும்முரமாய் சுழன்றன, மீன்களுக்காகவும், மிச்சம் மீதிக்காகவும், பறவைகள் சண்டையிட்டுக் கொண்டிருந்தன, நானும் எனது மனைவியும் அமர்ந்துகொண்டு ஒரு தம்பதியினரை பார்த்துக் கொண்டிருந்தோம். அவர்கள் கருத்த நிறமுடைய நாற்பது வயதை நெருங்கியவர்கள். அந்த பெண் அவரையே உற்று நோக்கிக்கொண்டிருக்க, தன்னைச் சுற்றிலும் மக்கள் இருக்கிறார்கள் என்ற உணர்வு துளியும் இல்லாமல், அவரைப் பார்த்து அந்த ஆண் ஒரு காதல் பாடலை தன் சொந்த மொழியில் மெய்மறந்து பாடிக் கொண்டிருந்தார்; அதை, தென்றல் ரம்மியமாக எங்களிடம் கொண்டு சேர்த்தது.
அந்த மகிழ்ச்சியான செயல் செப்பனியா புத்தகத்தை எனக்கு நினைவூட்டியது. ஆரம்பத்தில் ஏன் என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். செப்பனியாவின் நாட்களில், இஸ்ரவேல் ஜனங்கள் அந்நிய விக்கிரகங்களுக்கு முன்பாக விழுந்து பணிந்தனர் (1:4-5); தீர்க்கதரிசிகளும், ஆசாரியர்களும் வீண்பெருமைக்காரர்களாகவும், வஞ்சகர்களாகவும் இருந்தனர் (3:4). புத்தகத்தின் பெரும்பாலான இடங்களில் இஸ்ரவேல் மீது மட்டும் வரப்போகிற நியாயத்தீர்ப்பாக இல்லாமல், உலகம் முழுமைக்கும் ஏற்படப்போகிற நியாயத்தீர்ப்பை அறிவிக்கிறது (வச. 8).
ஆனால் செப்பனியா வேறொன்றைப் பார்க்கிறார். அந்த மப்பும் மந்தாரமுமான நாளிலிருந்து தேவனை முழுமனதுடன் நேசிக்கிற ஒரு கூட்டம் எழும்புகிறது (வச. 9-13). இந்த கூட்டத்திற்கு, தன் மணவாட்டியை நேசிக்கும் நேசராய் தேவன் வெளிப்படுகிறார்: “அவர் உன்பேரில் சந்தோஷமாய் மகிழ்ந்து, தம்முடைய அன்பினிமித்தம் அமர்ந்திருப்பார்; அவர் உன்பேரில் கெம்பீரமாய்க் களிகூருவார்” (வச. 17).
சிருஷ்டிகர், பிதா, பராக்கிரமசாலி, நியாயாதிபதி. என வேதாகமம் தேவனுக்கு பல தலைப்புகளைக் கொடுக்கிறது. ஆனால் நம்மில் எத்தனைபேர், தன் உதட்டில் நேசகீதத்தை முணுமுணுக்கும் ஒரு பாடகராய் தேவனைப் பார்த்திருக்கிறோம்?
தேவனை நீங்கள் யாராய் சித்தரிக்கிறீர்கள் - சிருஷ்டிகர், பிதா, பராக்கிரமசாலி, அல்லது வேறு யாராக சித்தரிக்கிறீர்கள்? நீங்கள் தேவனை நேச மணவாளனாகவும் உங்களை அவருடைய மணவாட்டியாகவும் எண்ணினால், உங்கள் வாழ்க்கை எவ்வாறு மாறும்?
சிறந்த பாடகரே, என்னைக் குறித்த உம்முடைய பாடலில் நான் மகிழ்கிறேன்.