ஒரு கயிறு அறுபடுவது போல, டக் மெர்க்கியின் வாழ்க்கைக் கயிறு ஒன்றன்பின் ஒன்றாக அறுபட்டுக் கொண்டிருந்தது. “புற்றுநோயுடன் போராடி என் தாயார் தோற்றுப் போனார்; வெகுநாளாய் இருந்த என்னுடைய காதல் வாழ்க்கை முடிவுக்கு வந்தது; என் வருமானம் தடைபட்டது; என் வேலை மந்தமாக சென்றது… என்னைச் சுற்றியிருந்த இந்த பிரச்சனைகளினால் என்னுடைய ஆவிக்குரிய இருள் மிகவும் ஆழமாயிருந்தது” என்று போதகரும், சிற்பியுமான டக் மெர்க்கி எழுதுகிறார். இந்த கூட்டுநிகழ்வுகளும் அவருடைய இறுக்கமான வாழ்க்கையும் இணைந்து, “மறைவிடம்” என்ற ஒரு சிற்பத்தை அவர் செதுக்க நேர்ந்தது. கிறிஸ்துவின் ஆணியடிக்கப்பட்ட கரங்கள் இரண்டும் அதற்குள் ஏதோ ஒன்றை பாதுகாப்பதுபோல மூடியிருக்கும்படி அந்த சிற்பத்தை வடித்திருந்தார்.
அந்த சிற்பம் “தனக்குள் வந்து ஒளிந்துகொள்ளும்படிக்கு கிறிஸ்து கொடுக்கும் அறைக்கூவல்” என்று டக் தன்னுடைய சிற்பத்திற்கு விளக்கமளிக்கிறார். சங்கீதம் 32ல், தாவீது தேவனையே தன்னுடைய சிறந்த புகலிடமாய் கண்டுபிடித்ததாக பாடுகிறார். அவர் நம்முடைய பாவங்களுக்கு மன்னிப்பு அருளுகிறார் (வச. 1-5). குழப்பங்களின் மத்தியில் ஜெபிக்கும்படிக்கு நம்மை ஊக்குவிக்கிறார் (வச. 6). 7ஆம் வசனத்தில், சங்கீதக்காரன் தேவன் மீதான தன்னுடைய நம்பிக்கையை பிரதிபலிக்கிறார்: “நீர் எனக்கு மறைவிடமாயிருக்கிறீர்; என்னை நீர் இக்கட்டுக்கு விலக்கிக்காத்து, இரட்சணியப் பாடல்கள் என்னைச் சூழ்ந்துகொள்ளும்படி செய்வீர்.”
பிரச்சனைகள் வரும்போது நீங்கள் யாரிடமாய் திரும்புகிறீர்கள்? நம்முடைய பூமிக்குரிய வாழ்க்கை உடைந்து கேள்விக்குள்ளாகும் போது, இயேசுவின் மன்னிப்பின் மூலம் நித்தியப் பாதுகாப்பை அருளும் தேவனிடத்தில் நாம் மறைந்துகொள்ளலாம்.
இயேசுவில் புகலிடத்தையும், பாதுகாப்பையும், மன்னிப்பையும் பெறுவது என்றால் என்ன? உங்களுடைய அக்கறை, பயங்கள் மற்றும் சுமைகளுக்கு உங்களுக்கு தேவையானதை அவர் எவ்வாறு வழங்குகிறார்?
பிதாவே, நீர் இல்லாமல் என் வாழ்க்கையை நான் ஒருங்கிணைக்க முயற்சித்ததை நீர் அறிவீர். என்னை திசைதிருப்பும் என்னுடைய தவறான திட்டங்களை கைவிட்டு உம்மிடத்தில் முற்றிலும் அடைக்கலம் தேட எனக்கு உதவிச்செய்யும்.