நாம் சரித்திர சிறப்புமிக்க, நவீன சிந்தனையாளர்களாய் இருந்த அருட்பணியாளர்களை நினைக்கும்போது, சார்லஸ் இரேனியஸ் (1790-1838) என்ற பெயர் நம்முடைய நினைவுக்கு வருவதில்லை. ஆனால் நிச்சயம் அது வந்தாகவேண்டும். ஜெர்மானிய தேசத்தில் பிறந்த இரேனியஸ், தமிழ்நாட்டில் உள்ள திருநெல்வேலிக்கு அந்தப் பகுதியின் முதல் அருட்பணியாளர்களின் வரிசையில் வந்தார். குறுகிய காலகட்டத்திலே 90 கிராமங்களுக்கு இயேசுவின் சுவிசேஷத்தை கொண்டுபோய் சேர்த்து, மூன்றாயிரம் ஆத்துமாக்களை சம்பாதித்தார். அவர் எழுத்தாளராகவும், வேதாகமத்தை தமிழ் மொழிக்கு மொழிபெயர்ப்பவராகவும் பணியாற்றினார். மேலும் அவர் “திருநெல்வேலியின் அப்போஸ்தலன்” என்று பரவலாக அறியப்பட்டிருக்கிறார், தென்னிந்திய திருச்சபையை நிறுவிய அருட்தந்தைகளில் ஒருவராகவும் இருக்கிறார்.
தேவனுடைய ராஜ்யத்தின் பணிக்கு ஏற்ற இரேனியஸின் வியத்தகு வாழ்வை சிலர் மறந்திருக்கலாம் ஆனால் அவருடைய ஆவிக்குரிய சேவையை தேவன் ஒருபோதும் மறக்க மாட்டார். தேவனுக்கென்று நீங்கள் செய்வதையும் அவர் மறக்கமாட்டார். எபிரெயருக்கு எழுதின நிருபம் இப்படிப்பட்ட வார்த்தைகளால் நம்மை ஊக்குவிக்கிறது, ” உங்கள் கிரியையையும், நீங்கள் பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ்செய்ததினாலும் செய்து வருகிறதினாலும் தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்குத் தேவன் அநீதியுள்ளவரல்லவே” (6:10). தேவனுடைய உண்மைத்தன்மையை ஒருபோதும் குறைத்து மதிப்பிட முடியாது, ஏனெனில் அவர் தம்முடைய நாமத்தினாலே செய்யப்பட்ட அனைத்தையும் மெய்யாய் அறிந்திருக்கிறார், அவைகளை ஞாபகத்தில் வைத்துள்ளார். அவ்வாறே எபிரேயருக்கு எழுதப்பட்ட நிருபம், “வாக்குத்தத்தமான ஆசீர்வாதங்களை விசுவாசத்தினாலும் நீடிய பொறுமையினாலும் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களைப் பின்பற்றுகிறவர்களாயிருந்து” (வ.11) என்று நம்மை ஊக்குவிக்கிறது.
நாம் யாரும் அறியாவண்ணம் நம் சபையிலும், சமுதாயத்திலும் சேவை செய்கையில் நம்முடைய கடுமையான பணி ஒருவராலும் பாராட்டப் படவில்லை என்று நாம் உணர்வது இயல்புதான். மனம் தளராதீர்கள், நம்மை சுற்றியுள்ள ஜனங்கள் நமது சேவைகளை அங்கீகரிக்கிறார்களோ, வெகுமதி அளிக்கிறார்களோ இல்லையோ, தேவன் உண்மையுள்ளவர். அவர் ஒருபோதும் நம்மை மறப்பதில்லை.
இன்று தேவனுக்கென்று நீங்கள் என்ன சேவை செய்கிறீர்கள்? அது புறக்கணிக்கப்பட்டதாய் தோன்றினாலும் தேவன் உங்கள் சேவையை மறப்பதில்லை என்பது உங்களை எவ்வாறு ஊக்குவிக்கிறது?
அன்பு தேவனே, நான் உமக்கென்று செய்யும் சேவை மிகவும் குறைவு உள்ளதுதான், ஆயினும் நான் உம்மை சேவிக்கயில், அந்த சேவையை நீர் மறப்பதில்லை என்றும் அதற்கு மதிப்பளிக்கிறீர் என்றும் அறிந்திருக்கிறேன் சேவை செய்ய தேவையானதை தருவதற்காக உமக்கு நன்றி.