என் நண்பனின் அப்பா சமீபத்தில் மரித்துவிட்டார். அவர் வியாதிபட்ட உடனே அவர் நிலைமை வேகமாக சீர்குழைந்தது, பின்னர் சில நாட்களிலேயே அவர் கடந்து போய்விட்டார். என் நண்பனும், அவன் தந்தையும் எப்போதும் நெருங்கிய உறவிலிருந்தார்கள், ஆயினும் கேட்கப்பட வேண்டிய அநேக கேள்விகள் இருந்தன, தேடப்படவேண்டிய பதில்களும், பேசப்பட வேண்டிய உரையாடல்களும் இருந்தன. சொல்லப்படாத அநேக காரியங்கள் இருக்க, இப்போது அவனுடைய தந்தை போய்விட்டார். என் நண்பன் ஒரு தேர்ந்த ஆலோசகர்: அவனுக்கு துயரத்தின் நெளிவுசுளிவுகள் எல்லாம் அத்துப்படி, கடினமான சூழ்நிலையில் இருப்பவர்களுக்கு எவ்வாறு உதவ வேண்டுமென்று நன்கு அறிந்திருந்தான். இருந்தபோதிலும் அவன் என்னிடம், “சில நாட்கள் அப்பாவின் குரல் எனக்கு கேட்க வேண்டுமென்று உள்ளது, அது எனக்கான அன்பை உறுதியளித்தது. அதுவே எப்போதும் என்னுடைய உலகமாய் இருந்தது” என்றான்.
இயேசுவின் பூமிக்குரிய ஊழியத்தின் ஆரம்பத்திலே யோவானின் கைகளால் ஞானஸ்நானம் பெற்றது மிக முக்கியமான பகுதியாகும். யோவான் அதற்கு தடைசெய்ய முயன்றபோதிலும், அந்த தருணம் தன்னை மனித குலத்தோடு அடையாளபடுத்திகொள்ள அவசியமானது என்று வலியுறுத்தினார். “இப்பொழுது இடங்கொடு, இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது ” (மத்தேயு 3:15) இயேசு சொன்னபடியே யோவான் செய்தான். பின்பு ஏதோவொன்று நடந்தது, அது யோவானுக்கும், சுற்றியிருந்த கூட்டத்திற்கும் இயேசுவின் அடையாளத்தை அறிவித்தது, மேலும் அது இயேசுவின் இதயத்தையும் ஆழமாக தொட்டிருக்க வேண்டும். பிதாவின் சத்தம் குமாரனுக்கு உறுதியளித்தது: “இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன்” (வ.17)
அதே குரல் விசுவாசிகளாகிய நம்முடைய இதயங்களிலும் நமக்கான அவருடைய பேரன்பை உறுதியளிக்கிறது (1 யோவான் 3:1)
உறுதியளிக்கும் வார்த்தைகளை பேசும் பிதாவின் சத்தத்தை நீங்கள் எப்போது கேட்டீர்கள்? அதே உறுதியளிப்போடு இன்று மற்றவர்களை எவ்வாறு சந்தித்து அவர்களை எவ்வாறு ஊக்குவிப்பீர்கள்?
பிதாவே, நான் யாருடையவன் என்றும், நான் எவ்வளவாய் நேசிக்கப்படுகிறேன் என்றும் உம் உறுதியளிக்கும் சத்தம் எனக்கு சொல்வதற்காக உமக்கு நன்றி.