ஆரோன் பர் அமெரிக்க நாடாளுமன்றத்தில் சமநிலை உடைக்கும் வாக்கெடுப்பின் முடிவிற்காக கவலையோடு காத்திருந்தார். 1800ல் தாமஸ் ஜெபர்ஸனுடனான அதிபருக்கான தேர்தல் போட்டியில் வாழ்வா சாவா என்ற கட்டத்தில், தன்னையே அதிபராக தேர்வுக்குழு அறிவிக்கும் என்று ஆரோன் பர் நம்ப காரணமிருந்தது. எனினும் அவர் தோற்றார், கசப்பு அவரை ஆழமாய் ஊடுருவியது. அலெக்சாண்டர் ஹாமில்டன் தன்னை அதிபர் வேட்பாளராக ஆதரிக்காத காரணத்தால் அவருக்கு எதிராக மனக்கசப்பை வளர்த்துக்கொண்ட பர், அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள்ளாகவே ஹாமில்டனை துப்பாக்கிச்சண்டையில் சுட்டுக்கொன்றார். இந்த கொலையால் வென்குண்டெழுந்த முழு தேசமும் அவருக்கு விரோதமாக திரும்ப, பர் முற்றிலும் புறக்கணிக்கப்பட்ட முதியவராக மரித்தார்.
அரசியல் விளையாட்டுக்கள் சரித்திரத்தில் கொடுமையான பங்காற்றியுள்ளன. தாவீது ராஜா மரிக்கும் தருவாயில் இருக்கையில், அவருடைய குமாரன் அதோனியா என்பவன் தாவீதின் தளபதியையும், மிக முக்கியமான ஆசாரியனையும் தன்னை ராஜாவாக்கும்படி தனக்கென்று பணியமர்த்திக்கொண்டான் (1 இராஜாக்கள் 1:5-8). ஆனால் தாவீது சாலொமோனையே ராஜாவாக தெரிந்து கொண்டார் (வ.17). தீர்க்கதரிசியான நாத்தானின் உதவியோடு இந்த கிளர்ச்சி முறியடிக்கப்படுகிறது (வ.11-53). அதோனியா சற்று ஓய்ந்தாலும், மீண்டும் இரண்டாம் முறை அரியணை ஏற திட்டம் தீட்டினான், எனவே சாலொமோன் அவனை கொல்ல வேண்டியிருந்தது (1 இராஜாக்கள் 2:13-25).
நம் மனுஷீக சுபாவமே நமக்கு உரிமை இல்லாதவைகளை சொந்தமாக்கிக்கொள்ள தூண்டுகிறது! நம் எவ்வளவுதான் கடினமாய் அதிகாரம், கவுரவம் அல்லது சொத்துக்களை அடைய முயன்றாலும் அது ஒரு போதும் நமக்கு நிறைவை தராது. அது எப்போதுமே நமக்கு பற்றாக்குறையாய் தான் இருக்கும். ஆனால் இயேசுவோ நம்மை போலல்லாமல் “மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்.” (பிலிப்பியர் 2:8)
இதற்கு முரணாக, சுயநலமாக நம்முடைய சொந்த விருப்பங்களையே நாம் தொடர்ந்தால் நம்முடைய ஆழமான, உண்மையான ஏக்கங்கள் தீராது. முடிவுகள் அனைத்தையும் தேவனுடைய கரங்களில் விட்டுவிடுவதே சமாதானதிற்கும், சந்தோஷத்திற்குமான ஒரே வழி.
உங்கள் விருப்பங்களும், இலட்சியங்களும் உங்கள் இதயத்தை குறித்து உங்களிடம் கூறுவதென்ன? இன்று நீங்கள் தேவனுக்கு கொடுக்க வேண்டியதென்ன?
அன்பு தேவனே, நீர் எனக்களித்த பொறுப்பை நிறைவேற்றுவதை தவிர நான் பேராசை கொள்ளாமல் இருக்க எனக்கு உதவும். அனைத்திலும் உம்மையே நம்ப உதவும்.