“என்னை மன்னிக்கவும்,” சீமா தன் கண்ணீருக்காக மன்னிப்புக் கேட்டார். அவருடைய கணவர் இறந்த பிறகு, தன்னுடைய பதின்ம வயது குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பை அவர் ஏற்க நேர்ந்தது. அவருடைய திருச்சபை, அவருடைய சுமையை குறைக்கும் விதத்தில் ஒரு வாரயிறுதி உல்லாச முகாமுக்கு அவர்களை அழைத்து மகிழ்ச்சிபடுத்தியது. அந்த மகிழ்ச்சி பெருமிதத்தில் கண்ணீர் சிந்திய சீமா, தன்னுடைய கண்ணீருக்காக மன்னிப்புக் கோரினாள்.
நாம் ஏன் கண்ணீருக்காக மன்னிப்புக் கேட்கிறோம்? சீமோன் என்னும் ஒரு பரிசேயன் இயேசுவை விருந்துக்கு அழைக்கிறான். உணவின் இடையிலே ஒரு பாவியாகிய பெண் தன்னோடு பரிமளதைலத்தைக் கொண்டுவருகிறாள். “அவருடைய பாதங்களின் அருகே பின்னாக நின்று அழுதுகொண்டு, அவருடைய பாதங்களைத் தன் கண்ணீரினால் நனைத்து, தன் தலைமயிரினால் துடைத்து, அவருடைய பாதங்களை முத்தஞ்செய்து, பரிமளதைலத்தைப் பூசினாள்” (லூக்கா 7:38). சற்றும் தயக்கமின்றி இந்த ஸ்திரீ, வெளிப்படையாக தன்னுடைய அன்பை பிரதிபலிக்க தன் தலைமயிரினால் இயேசுவின் பாதத்தைத் துடைத்தாள். நன்றி பெருக்காலும், அன்பாலும் அவள் கண்ணீரின் மேலே பரிமள தைலத்துடன் முத்தங்களை பரிசாக்கினாள். அவளுடைய இந்த செய்கை இந்த விருந்தை ஆயத்தப்படுத்திய இரக்கமற்ற பரிசேயனின் எதிர்பார்ப்பிற்கு மாறாக இருந்தது.
அவனுக்கு இயேசுவின் பதில்? அவர் அவளின் உற்சாகமான அன்பின் வெளிப்பாட்டை புகழ்ந்து, அவளின் அநேக பாவங்கள் “மன்னிக்கப்பட்டது” (வச. 44-48) என்று அறிவித்தார்.
நன்றியுணர்வினால் கண்ணீர் பெருக்கெடுக்கும்போது, அந்த கண்ணீரை நாம் அடக்கிவைக்க முற்படுகிறோம். ஆனால் தேவன் நம்மை உணர்ச்சி மிகுந்தவர்களாகவே படைத்துள்ளார். நாம் அவரை நம் உணர்வுகள் மூலம் கனப்படுத்துகிறோம். லூக்கா நற்செய்தியில் வரும் பெண்ணைப் போல நாமும் நமது நல்ல தேவனிடம் நம் அன்பை தயக்கமின்றி வெளிப்படுத்துவோம். தேவன் நம் தேவைகளை எல்லாம் சந்திக்கிறார். அவர் நம் நன்றியின் பதில்களையும் சுதந்திரமாக ஏற்றுக்கொள்ளுகிறார்.
இன்று நீங்கள் உங்கள் உணர்வுகளின் மூலம் தேவனுக்கு வெளிப்படையாக உங்கள் நன்றியை எவ்வாறு தெரிவிக்க முடியும்? மற்றவர்கள் தங்கள் கண்ணீரைப் பகிரும் போது, அவர்களை எவ்விதம் ஆறுதல்படுத்துவீர்கள்?
அன்பான தேவனே, என் தேவைகளைச் சந்திக்கும் உமது கிருபைக்காக நன்றி. இன்று என் நன்றியை உம்மிடம் ஊற்றுகிறேன்.