காத்லீன் நாரிஸ் என்னும் எழுத்தாளர், “பரிபூரண வாதம் (Perfectionism) என்பது எனக்குத் தெரிந்த வார்த்தைகளிலேயே பயங்கரமான ஒரு வார்த்தை,” என்கிறார். அவர் நவீன காலத்து பரிபூரண வாதத்தையும், மத்தேயுவில் விளக்கியுள்ள பரிபூரணத்திற்கும் உள்ள வித்தியாசத்தை விளக்குகிறார். நவீன காலத்து பரிபூரண வாதம் என்பது ஒரு தீவிர உளவியல் துன்பம். அது மக்களை எந்த ஒரு சவாலையும் துணிச்சலுடன் எதிர்கொள்ளவிடாமல் தடுக்கிறது என்கிறார். ஆனால் மத்தேயுவில் வரும் பூரணம் என்பது “முதிர்ந்த” அல்லது “முழுமையான” என்று பொருள்படுகிறது. “பரிபூரணம் என்பது வளர்ச்சிக்கு இடம் தந்து, முதிர்ச்சியடைந்தவர்களாய் மற்றவர்களுக்கு நம்மையே தருவதாகும்” என்று நாரிஸ் குறிப்பிடுகிறார். 

பரிபூரணம் என்பதை இந்த வழியில் புரிந்துகொள்ள மத்தேயுவில் ஒரு ஆழமான கதை இருக்கிறது. மத்தேயு 19ல் இயேசுவிடம் ஒருவன் வந்து “நித்திய ஜீவனை அடைவதற்கு நான் எந்த நன்மையைச் செய்ய வேண்டும்?” என்று கேட்கிறான் (வச. 16). இயேசு பதிலுக்கு “கற்பனைகளைக் கைக்கொள்” என்கிறார் (வச. 17). இதையெல்லாம் கைகொண்டிருக்கிறேனே இன்னும் என்னிடத்தில் குறைவு என்ன? என்று அந்த மனிதன் கேட்கிறான் (வச. 20). 

அப்பொழுது அந்த மனிதனின் ஐசுவரியம் தான் அவன் மனதைப் பற்றியிருக்கும் பிடி என்பதை இயேசு உணர்ந்துகொண்டார். எனவே இயேசு, “நீ பூரண சற்குணனாயிருக்க விரும்பினால், போய், உனக்கு உண்டானவைகளை விற்று, தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது, பரலோகத்தில் உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்” என்கிறார் (வச. 21). 

நாம் ஒவ்வொருவரும் பரிபூரணத்திற்கு அவரவருக்கு சாதகமான விளக்கத்தை வைத்திருக்கிறோம். நாம் பற்றியிருக்கும் ஆஸ்திகள் அல்லது பழக்கவழக்கங்கள் ஆகியவற்றை கட்டுக்குள் வைக்கும் முயற்சி பயனற்றது. இன்று இயேசுவின் மென்மையான அழைப்பைக் கேட்டு உங்களை ஒப்படையுங்கள், பரிபூரணத்தில் விடுதலையடையுங்கள், அது தேவனால் மட்டுமே கூடும் (வச. 26).