ஒரு பேராசிரியர் வழக்கமாக தன் ஆன்லைன் வகுப்பு இரண்டு விதமாக நிறைவுசெய்வார். அவர், “அடுத்தமுறை சந்திப்போம்” அல்லது “ஒரு நல்ல வாரயிறுதியை அனுபவியுங்கள்” என்று நிறைவுசெய்வார். சில மாணவர்கள், “நீங்களும் அவ்வாறே செய்யுங்கள், நன்றி!” என்று வாழ்த்துவார்கள். ஒருநாள் ஒரு மாணவர் பதிலுக்கு, “நான் உம்மை நேசிக்கிறேன்” என்றானாம். அவர் ஆச்சரியத்துடன், “நானும் உம்மை நேசிக்கிறேன்!” என்று பதிலளித்தாராம். அவனோடு கூட படிக்கும் மாணவர்கள் அனைவரும், அடுத்த ஆன்லைன் வகுப்பு நிறைவுறும்போது அவ்வாறே சொல்லுவதற்கு தீர்மானித்தனர். சில நாட்களுக்கு பிறகு அவர் பாடம் நடத்திய பின் ஒவ்வொரு மாணவர்களும் “நான் உம்மை நேசிக்கிறேன்” என்று வாழ்த்தினார்களாம். மாதக்கணக்காய் இந்த வழக்கத்தை அவர்கள் கடைபிடித்தனராம். ஆசிரியர் இந்த “நான் உம்மை நேசிக்கிறேன் சங்கிலி” ஒரு பலமான பிணைப்பை அவருக்கும் அவருடைய மாணவர்களுக்கும் இடையே உருவாக்கியதால், அவர் அந்த வகுப்பை தன்னுடைய குடும்பமாய் கருதுகிறார்.
1 யோவான் 4:10-21ல், நாம் தேவனுடைய குடும்பமாய் இருப்பதால், அவரிடம் “நான் உம்மை நேசிக்கிறேன்” என்று சொல்ல பல காரணங்கள் இருக்கின்றன: அவர் தம்முடைய குமாரனை நம் பாவத்திற்கான பலியாகக் கொடுத்தார் (வச. 10). அவர் தம்முடைய பரிசுத்த ஆவியானவரை நம்முள்ளே வாசம்பண்ண அனுமதித்திருக்கிறார் (வச. 13, 15). அவருடைய அன்பு நம்பகமானது (வச. 16). நாம் ஆக்கினைத் தீர்ப்பைக் குறித்து ஒருபோதும் பயப்படத் தேவையில்லை (வச. 17). “அவர் முந்தி நம்மிடத்தில் அன்பு கூர்ந்தபடியால்” (வச. 19) அவரையும் மற்றவர்களையும் நேசிக்க உதவுகிறார்.
அடுத்த முறை தேவ ஜனத்தோடு கூடும்போது நீங்கள் ஏன் தேவனை நேசிக்கிறீர்கள் என்ற காரணங்களை பகிர்வதற்கு நேரம் செலவழியுங்கள். “நான் உம்மை நேசிக்கிறேன்” என்ற சங்கிலியை தேவனுக்காய் உருவாக்கி, தேவனை துதியுங்கள்; தேவனோடு இன்னும் கிட்டிச் சேருங்கள்.
நீங்கள் தேவனை ஏன் நேசிக்கவேண்டும்? அவரின் அன்பை நீங்கள் எவ்வாறு வெளிப்படுத்துவீர்கள்?
தகப்பனே, உம்முடைய அன்பை நான் உணரவும் உம்முடைய குடும்பத்தின் அங்கத்தினராய் இருப்பதற்காகவும் உமக்கு நன்றி. உமது அன்பை நேர்த்தியாய் வெளிப்படுத்த எனக்கு வழிகளை காண்பியும்.