தீர்மானங்கள் எடுப்பதே அதை உடைப்பதற்காக என்று தோன்றுகிறது. அது சாத்தியம் என்று புத்தாண்டின்போது சிலர் இதை கேலியாக சொல்வதுண்டு. அவ்வாறு சமூக ஊடகத்தில் உலா வந்த சிலவைகள்: போக்குவரத்து சிக்னலில் நிற்கும்போது சக வாகன ஓட்டிகளைப் பார்த்து கை அசையுங்கள். மாரத்தான் ஓடுவதற்கு கையெழுத்திட்டு, ஓடாமல் இருங்கள். தள்ளிப் போடுவதை நாளைக்கு நிறுத்திக்கொள்ளலாம். சிரி செயலியின் துணையில்லாமல் தொலைந்து போகலாம். உடற்பயிற்சி பதிவுகளை பதிவிடுபவர்களை நட்பு வட்டத்திலிருந்து நீக்கிவிடவும்.  

புதிய துவக்கம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. சிறைபிடிக்கப்பட்ட யூத மக்களுக்கு ஒரு புதிய துவக்கம் அவசியமாயிருந்தது. அவர்களின் 70 ஆண்டுகள் சிறையிருப்பு பயணத்தில், இருபதாம் ஆண்டு கடந்தபோது, எசேக்கியேல் தீர்க்கதரிசியின் மூலம், “நான் யாக்கோபின் சிறையிருப்பைத் திருப்பி” (எசேக்கியல் 39:26) என்று தேவன் அவர்களை உற்சாகப்படுத்துகிறார். ஆனால் 800 ஆண்டுகளுக்கு முன்பாக மோசேயின் மூலமாக தேவன் அவர்களுக்குக் கொடுத்த நியாயப்பிரமாணம் என்னும் அடிப்படைக்கு அவர்கள் மீண்டும் திரும்பவேண்டும். புத்தாண்டில் பண்டிகையை அனுசரிப்பதும் அதில் ஒன்று (45:18). தேவனுடைய குணாதிசயங்களையும் எதிர்பார்ப்புகளையும் நினைவுபடுத்துவதே பண்டிகைகளை அனுசரிப்பதின் பிரதான நோக்கம். தேவன் அதிபதிகளிடம், “நீங்கள் கொடுமையையும் கொள்ளையிடுதலையும் தவிர்த்து, நியாயத்தையும் நீதியையும் செய்யுங்கள்” (வச. 9) என்றும் உத்தமமாய் நடங்கள் என்றும் வலியுறுத்தினார் (வச. 10).

இந்த பாடம் நமக்கும் பொருந்தும். நமது விசுவாசம் கிரியைகள் இல்லாதிருந்தால் தன்னிலே தானே செத்ததாயிருக்கும் (யாக்கோபு 2:17). இந்த புத்தாண்டில் நம்முடைய தேவைகளை தேவன் நமக்கு சந்திப்பதுபோல, அவருடைய அடிப்படைக் கற்பனைகளாகிய, “உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்பு கூருவாயாக” மற்றும் “உன்னிடத்தில் நீ அன்பு கூருவது போல பிறனிடத்திலும் அன்பு கூருவாயாக” (மத்தேயு 22:37-39) என்னும் கற்பனைகளைக் கைக்கொள்ள தீர்மானிப்போம்.