ஒவ்வொரு நாளும் என்னுடைய சிநேகிதனுடைய வீட்டின் கதவைத் தட்டி, வெறுமையான பிளாஸ்டிக் பாட்டில்கள் இருக்குமா என்று கேட்கும் ஒரு பலவீனமான பெண்ணை அவர் பார்த்தார். அந்த பாட்டில்களை விற்று அதில் வரும் வருமானமே அவளுடைய வாழ்வாதாரம். என்னுடைய சிநேகிதனுக்கு ஒரு எண்ணம் உதித்தது. “நீங்கள் எங்கு தங்கியிருக்கிறீர்கள் என்று சொல்லமுடியுமா?” என்று அவளிடம் கேட்டார். அந்த பெண் அவரை ஒரு குறுகிய பாதையின் வழியாய் குப்பையான இடத்திற்கு அழைத்துச்சென்றாள். அவள் தங்குமிடத்தைக் கண்டு இரக்கப்பட்ட அவர், அவள் உறங்குவதற்கு ஏதுவான ஒரு சிறிய கூடாரத்தை அமைத்துக்கொடுத்தார். அப்போது தான் அவருக்கு இன்னொரு எண்ணம் உதித்தது. அவர் ஆன்லைனில் பிரச்சாரம் செய்து, ஸ்தல திருச்சபைகளோடு இணைந்து, ஆதரவற்றவர்களுக்கு வீடு கட்டுவதற்கான இடத்தை ஒழுங்குசெய்தார்.
ஆதரவற்றவர்களுக்கு உதவும்படி வேதாகமம் முழுமையும் தேவ ஜனத்திற்கு நினைவுபடுத்துகிறது. இஸ்ரவேலர்களை கானான் தேசத்திற்கு போவதற்கு ஆயத்தம்பண்ணும்படிக்கு தேவன் மோசேயிடம் பேசும்போது, “அவனுக்கு (ஏழைக்கு) உன் கையைத் தாராளமாய்த் திறந்து, அவனுடைய அவசரத்தினிமித்தம் அவனுக்குத் தேவையானதைக் கடன்கொடுப்பாயாக” என்று உற்சாகப்படுத்துகிறார் (உபாகமம் 15:8). “தேசத்திலே எளியவர்கள் இல்லாதிருப்பதில்லை” (வச. 11) என்றும் அவ்வேதப்பகுதி அறிவிக்கிறது. இது உண்மை என்பதை அறிவதற்கு வெகுதூரம் போகவேண்டியதில்லை. “உன் தேசத்திலே சிறுமைப்பட்டவனும் எளியவனுமாகிய உன் சகோதரனுக்கு உன் கையைத் தாராளமாய்த் திறக்கவேண்டும்” என்று தேவன் இஸ்ரவேலுக்கு அழைக்கிறார் என்றால் நாமும் தேவையிலுள்ளவர்களுக்கு உதவவேண்டும்.
ஒவ்வொருவருக்கும் உணவு, தங்குமிடம் மற்றும் தண்ணீர் அவசியம். நம்மிடத்தில் அதிகம் இல்லையென்றாலும், மற்றவர்களுக்கு உதவும் வகையில் தேவன் நம்மை பயன்படுத்துவாராக. உணவை பகிர்ந்துகொள்வதாயிருக்கட்டும், அல்லது உடையை கொடுத்து உதவுதாயிருக்கட்டும், நம்மால் முடிந்த சிறிய உதவிகள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும்.
இன்றைய தேவைகள் என்று நீங்கள் பார்த்த, கேள்விப்பட்டவைகள் என்ன? அவர்களுக்கு உங்களால் என்ன உதவி செய்யமுடியம்?
இயேசுவே, என்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு உதவக்கூடிய வழியை எனக்குக் காண்பித்தருளும். எனக்கு தயாள குணத்தைத் தாரும்.